Published : 02 Aug 2019 10:29 AM
Last Updated : 02 Aug 2019 10:29 AM

கோவை மில் உரிமையாளர் வீட்டில் ரூ.2 கோடி நகை, பணம் திருடிய ஊழியர் கைது: ரயில் மூலம் தப்பியபோது பாட்னாவில் பிடிபட்டார் 

கோவை 

கோவையில் மில் உரிமையாளர் வீட்டில் ரூ.2.07 கோடி மதிப்பிலான நகை, பணத்தை திருடிய ஊழியரை போலீஸார் பாட்னாவில் கைது செய்தனர்.

கோவை ரேஸ்கோர்ஸை சேர்ந்த வர் சைலேஷ் எத்திராஜ் (53). மில் உரிமையாளர். இவர், ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 30-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘எங்கள் வீட்டில் வேலை செய்ய பணியாட்கள் உள்ளனர். கடந்த 28-ம் தேதி நான், மனைவியுடன் ஐதராபாத்தில் உள்ள எனது மகள் வீட்டுக்குச் சென்று விட்டேன். வீட்டில் 84 வயதான எனது தாய் இருந்தார். 30-ம் தேதி மீண்டும் கோவைக்கு திரும்பினேன்.

வீட்டுக்கு வந்து பார்த்தபோது, எனது அறையில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர வளையல், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர கம்மல், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள தாலி சங்கிலி, ரூ.9 லட்சம் மதிப் புள்ள தங்க வளையல், ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர சங்கிலி மற்றும் ரூ.17.50 லட்சம் ரொக்கப் பணம் என மொத்தம் ரூ.2.07 கோடி மதிப் பிலான நகை, பணத்தை காண வில்லை. என் வீட்டு ஊழியரான ஜார் கண்டை சேர்ந்த பிக்காஷ்குமார் ராய்(22) திருடிச் சென்றுவிட்டார்’’ எனக் கூறப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரித்தனர். அதில், வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிக் கொண்டு பிக்காஷ்குமார் ராய், ரயில் மூலம் தப்பிச் சென்றது தெரிந்தது. அவரைப் பிடிக்க உதவி ஆணையர் சோமசேகர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப் படையினர், பிக்காஷ்குமார் ராயை பாட்னாவில் கைது செய்தனர்.

பிடிபட்டது எப்படி?

போலீஸார் கூறும்போது, ‘சைலேஷ் எத்திராஜ் ஊருக்குச் சென்ற பின்னர், பிக்காஷ்குமார் நகை, பணத்தை திருடி பேக்கில் போட்டு வைத்துள்ளார். வழக்கமாக இரவு அவரது வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்றாக சாப்பிடுவர். 29-ம் தேதி இரவு சாப்பிடும்போது, பிக்காஷ்குமார் ராய் பாதியிலேயே அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அந்த நேரத்தில், மில்லின் வாகன ஓட்டுநர்கள் வருவா் என்பதால், காவலாளி கதவைப் பூட்டாமல் வெறுமனே மூடிவைத்து விட்டு கழிவறைக்குச் சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட பிக்காஷ்குமார் ராய் நகை, பணம் இருந்த பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, கோவை ரயில் நிலை யத்துக்கு சென்று, அங்கிருந்து பாட்னாவுக்கு செல்லும் ரயிலில் ஏறியுள்ளார்.

முன்பதிவில்லா டிக்கெட் வாங் கிக்கொண்டு, முன்பதிவு செய்த பெட்டியில் ஏறியுள்ளார். ரயில் நிலைய கேமராக்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்தது. ரயில்வே பாதுகாப்பு படை போலீ ஸார் உதவியுடன் விசாரித்தபோது, அந்த ரயில் பாட்னா அருகே சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அங்குள்ள ரயில்வே பாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டு, வாட்ஸ்-அப் மூலம் அவரது புகைப்படம் அனுப்பப்பட்டு பிக்காஷ்குமார் ராயை பிடித்துவைத்தனர். தனிப்படை போலீஸார் கோவையில் இருந்து விமானம் மூலம் பாட்னாவுக்கு சென்று, பிக்காஷ்குமார் ராயை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகை, பணம் மீட்கப்பட்டது.

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த பிக்காஷ்குமார் ராய் 6 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் அருப்புக்கோட் டைக்கு வந்து அங்கிருந்த மில்லில் பணியாற்றியுள்ளார். பின்னர், சைலேஷ் எத்திராஜ் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். கைது செய்யப்பட்ட பிக்காஷ்குமார் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவைக்கு அழைத்து வரப்படுவார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x