Published : 02 Aug 2019 07:14 AM
Last Updated : 02 Aug 2019 07:14 AM
சென்னை / கோவை
கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் அவரது தம்பி ரித்திக் ஆகிய இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத் தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
கோவை ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். ஜவுளி வியாபாரி. இவரது 11 வயது மகள் முஸ்கான் தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி ரித்திக் (8) அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2010 அக்டோபர் 29-ம் தேதி பள்ளிக்கு வாடகை வேனில் சென்ற இருவரும் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
சிறுமி முஸ்கானையும் அவரது தம்பி ரித்திக்கையும் வேன் ஓட்டுநரான மோகன்ராஜ் (எ) மோகனகிருஷ்ணன், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் பொள்ளாச்சி பெருமாள்மலை வனப் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமி முஸ்கானை பாலியல் வன்கொடுமை செய்த இருவரும், பின்னர் முஸ்கானையும், ரித்திக்கையும் பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் தள்ளி கொலை செய்துள்ளனர்.
தப்பிக்க முயற்சி
இதுதொடர்பாக கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, மோகன்ராஜ், மனோகரனை கைது செய்தனர்.
அதன்பிறகு கடந்த 2010 நவம்பர் 9-ம் தேதி விசாரணைக்காக மோகன்ராஜை போலீஸார் அழைத்துச் சென்றபோது கோவை போத்தனூர் அருகே போலீ ஸாரின் துப்பாக்கியை பிடுங்கி, போலீ ஸாரை சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி யோட முயன்றார். போலீஸார் திருப்பிச் சுட்டதில் மோகன்ராஜ் இறந்தார். இந்த சம்பவத்தின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் காயமடைந்தனர்.
அதன்பிறகு குற்றம்சாட்டப்பட்ட மனோ கரன் மட்டும், அப்போது கோவை 1-வது குற்றவியல் நடுவராக பணிபுரிந்த எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக ஆஜராகி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில் மோகன்ராஜூம், தானும் சிறுமி முஸ்கானை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தையும், அதற்கு சாட்சியமாக இருந்த சிறுவன் ரித்திக்கையும் கொலை செய்து பின்னர் இருவரையும் வாய்க் காலில் தள்ளி கொலை செய்ததையும் அந்த வாக்குமூலத்தில் விவரித்து இருந்தார்.
அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந் தது. அந்த விசாரணையின்போது குற்ற வாளியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற நீதித்துறை குற்றவியல் நடுவர் எல்.எஸ்.சத்தியமூர்த்தியும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதையடுத்து அந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம், மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
முக்கிய ஆதாரம்
அதன்பிறகு கடந்த 2014-ம் ஆண்டு இந்த தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராஜேஸ் வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு உறுதி செய்து தீர்ப் பளித்தது. அதில், இந்த வழக்கில் கண் ணால் பார்த்த சாட்சியங்கள் யாருமே இல்லாத நிலையில் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜராகி குற்றவாளி அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே குற்றத்தை நிரூபிக்க முக்கியமான ஆதார மாக உள்ளது. இந்த வழக்கில் அப்போது கோவை குற்றவியல் நடுவராக பணி புரிந்த எல்.எஸ்.சத்தியமூர்த்தி, சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு முறையாக குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்ய அந்த ஒப்புதல் வாக்குமூலமே முக்கியமாக உள்ளதால் அந்த குற்றவியல் நடு வரையும் பாராட்டுகிறோம் எனக்கூறி மனோகரனுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.
மேல்முறையீடு
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து தூக்குதண்டனை கைதி மனோகரன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோகின்டன் ஃபாலி நாரிமன், சஞ்சீவ் கண்ணா, சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் குற்றவாளியை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால், இதர 2 நீதிபதிகளும் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை சரியானதுதான் என உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
சரியான தீர்ப்பு
தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா தனது வாதத்தில், ‘‘இந்த வழக்கில் சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட் டுள்ளார். அதன் பிறகு அவரது தம்பியும் கொலை செய்யப்பட்டு, இருவரது உடல் களும் வாய்க்காலில் வீசப்பட்டுள்ளது. இந்த இரட்டைக் கொலையை மறைத்து, பாலியல் வன்கொடுமையை தடயமே இல்லாமல் அழிக்க முற்பட்டுள்ளனர். தாங்கள் செய்த குற்றத்தை குற்றவாளி தனது ஒப்புதல் வாக்குமூலத்திலும் தெளிவாக கூறியுள்ளார். எனவே இவரின் இந்த கொடூர செயலுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பைத் தான் வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப் பட்ட மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நாங்களும் உறுதி செய்கிறோம்” என தீர்ப்பில் கூறியுள்ளனர்.
அப்போது மனோகரனின் ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்து இந்த வழக்கில் சாட்சியம் அளித்த கோவை குற்றவியல் நடுவராக பணிபுரிந்த எல்.எஸ்.சத்தியமூர்த்தி தற்போது சென்னை 13-வது கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப் பட்ட இந்த வழக்கில் குற்றவாளியின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், இனி குற்றவாளி கடைசியாக குடியரசுத் தலை வருக்கு கருணை மனு அனுப்பலாம். அந்த கருணை மனுவை குடியரசுத் தலைவரும் நிராகரித்துவிட்டால் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை சட்டரீதியாக நிறை வேற்றப்படும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT