Published : 31 Jul 2019 05:48 PM
Last Updated : 31 Jul 2019 05:48 PM
உசிலம்பட்டியில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (31). ஆடுகளை வாங்கி, இறைச்சிக் கடைகளுக்கு விற்கும் தொழில் புரிந்துவந்தார்.
இவரது பெரியப்பா மகன் ஆசை(21). இருவருக்கும் ஒரே இடத்தில் நிலம் உள்ளது. தண்ணீர் பாய்ச்சுவதில் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை வழக்கம் போல் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள இறைச்சிக் கடை ஒன்றில், ஆடு விற்பனை செய்த பணம் வசூலிக்கச் சின்னமுனியாண்டி சென்றார்.
கடையின் அருகே பணம் வாங்குவதற்காக அவர் நின்றிருந்தார். அங்கு வந்த ஆசை ஏற்கனவே இருக்கும் முன்விரோதம் காரணமாக அவருடன் தகராறில் ஈடுபட்டார்.
ஆத்திரம் அடைந்த அவர் கறிக்கடை அரிவாளை எடுத்து சின்னமுனியாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார். தப்பிக்க முயன்ற அவரை அக்கம், பக்கத்தினர் பிடித்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற உசிலம்பட்டி நகர் போலீஸார் ஆசையை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT