Published : 26 Jul 2019 03:39 PM
Last Updated : 26 Jul 2019 03:39 PM

ஹெல்மெட் அணியாமல் சென்ற மாம்பலம் எஸ்.ஐ சஸ்பெண்ட்: போலீஸாரின் செயலியில் பொதுமக்கள் புகாரால் நடவடிக்கை 

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஹெல்மட் அணியாமல் சென்ற மாம்பலம் உதவி ஆய்வாளர் புகார் கிடைத்த சில மணி நேரத்தில், உயர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஹெல்மட் கட்டாயம் அணியவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த விதிகளை கடுமையாக பின்பற்ற போலீஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளது. ஹெல்மட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது.

சரியாக கடமையாற்றாத போலீஸார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எத்தனைபேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்கிற பட்டியலையும் உயர் நீதிமன்றம் கேட்டது. மேலும் போலீஸார் ஹெல்மட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட அதிகாரிகளுக்கு ஹெல்மட் குறித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் டிஜிபியின் உத்தரவை சில காவல் அதிகாரிகள் மதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவ்வாறு மதிக்காமல் நடப்பவர்கள் சிக்கும்போது அவர்கள்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை வரை பாய்கிறது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு  உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் எஸ்.மதன்குமார்.

இவர் இன்றுகாலை 9-10மணியளவில் தெற்கு உஸ்மான் சாலையில் ஹெல்மட் அணியாமல் தனது மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி  மதன்குமார் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. GCTP எனப்படும் போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்திய செயலியை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மதன்குமார் ஹெல்மெட் அணியாததை புகைப்படம் எடுத்து பொதுமக்களில் ஒருவர் அதை போக்குவரத்து காவல்துறைக்கு புகாராக அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் சிக்கியவர் மாம்பலம் உதவி ஆய்வாளர் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கு போக்குவரத்து காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தெற்கு இணை ஆணையர்,  உதவி ஆய்வாளர் மதன்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x