Published : 22 Jul 2019 07:53 PM
Last Updated : 22 Jul 2019 07:53 PM
திருவல்லிக்கேணியில் மழை பெய்த சாலையில் வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் வழுக்கி விழுந்ததில் பின்னால் அமர்ந்திருந்தவர் லாரியில் அடிபட்டு மரணமடைந்தார். உயிரிழந்தவர் இயக்குநர் மணிரத்னம் படத்தில் பணியாற்றி வரும் உதவி கலை இயக்குநர் எனத் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரீஸ்வரன். இவரது நெருங்கிய நண்பர் சேவுகபெருமாள் (45). இவரும் அதே ஊரைச் சேர்ந்தவர். இருவரும் சின்னத்திரைத் தொடர்களில் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். சேவுகபெருமாள் தற்போது மணிரத்னம் படத்தில் உதவி கலை இயக்கநராகப் பணியாற்றி வந்தார்.
இன்று அதிகாலை இருவரும் பல்சர் 220 மோட்டார் சைக்கிளில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை மாரீஸ்வரன் ஓட்ட, பின்னால் அமர்ந்து சென்றுள்ளார் சேவுகபெருமாள்.
மாரீஸ்வரன் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இரவு முதல் மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தது. வேகமாகச் சென்ற பைக் ஒரு ஆட்டோவை முந்த முயன்றது.
அப்போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்தது. இதில் பைக்கை ஓட்டிய மாரீஸ்வரன் ஒருபக்கம் விழ பின்னால் அமர்ந்திருந்த சேவுகபெருமாள் வலப்புறமாக கீழே விழுந்தார். அப்போது எதிர்ப்புறம் வந்த லாரி சேவுகபெருமாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த சேவுகபெருமாள் பல்வேறு டிவி தொடர்களில் உதவி கலை இயக்குநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வரும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் உதவி கலை இயக்குநராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
விபத்தில், பைக் ஓட்டிய மாரீஸ்வரனுக்கு கை, காலில் சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் உயிரிழந்த பெருமாள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரீஸ்வரன் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மழை பெய்து வழுக்கும் நிலையில் ஈரமாக இருந்த சாலையில் வேகமாக, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதே சாலையில் பைக் சறுக்கியதற்குக் காரணமாக அமைந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னால் அமர்ந்திருந்த பெருமாள் ஹெல்மெட் அணியவில்லை என்பதும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று விட்டு வந்த மாரீஸ்வரனை அண்ணாசதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். விபத்திற்குக் காரணமான அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரீஸ்வரன் மீது பிரிவு 279 (பொது இடத்தில் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை இயக்குவது), 304(ஏ) (அலட்சியமாகச் செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருத்தல்), 337- (தனி நபரின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT