Published : 20 Jul 2019 02:14 AM
Last Updated : 20 Jul 2019 02:14 AM

அடையார் தொழிலதிபர் கடத்தி கொல்லப்பட்டு உடல் கடலில் வீச்சு: 6 பேர் கைது, பெண் வழக்கறிஞர் தலைமறைவு

அடையாரில் 1 மாதம் முன் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு பிணம் கடலில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. அவரை கொலைசெய்து கடலில் வீசிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான பெண் வழக்கறிஞர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அடையார், இந்திரா நகர் முதல் அவின்யூவைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ்(50). இவருக்கு அரவிந்த்(34) என்கிற சகோதரர் உள்ளார். அவர் வெளிநாட்டில் வசிக்கிறார். வழக்கமாக சகோதரருடன் போனில் பேசும் அவர்  கடந்த மாதம் சுரேஷ் பரத்வாஜை தொடர்புக்கொள்ள முயன்றபோது அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அரவிந்த் சென்னையில் உள்ளவர்களை தொடர்புக்கொண்டார். அப்போது அவரது சகோதரர் சுரேஷ் பரத்வாஜ் காணாமல்போய் பலநாட்கள் ஆனதாக தெரியவந்தது. இதையடுத்து  அவரது தம்பி அரவிந்த வெளிநாட்டில் இருந்து  சென்னை காவல் ஆணையருக்கு  ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

புகார் அடையார் போலீஸாருக்கு மாற்றப்பட்டு  அடையார் போலீஸார் ஆள் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். 

பரத்வாஜ் செல்போன், கால் லிஸ்ட் எடுத்து அவர் யாருடன் அதிகமாக பேசி வந்துள்ளார், கடைசியாக யாருடன் பேசினார் என போலீஸார் ஆராய்ந்தனர். அந்த எண்களை வைத்து சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. காணாமல் போன பரத்வாஜ் கொல்லப்பட்டார் என்பதுதான் அந்த தகவல்.

பரத்வாஜுடன் கடைசியாக ஒரு பெண் வழக்கறிஞர் தொடர்பில் இருந்ததும் அவர் ஆட்களை  ஏவி  பரத்வாஜை  கடத்தி தாக்கி படகு மூலம் நடுக்கடலில் கொண்டு சென்று அங்கு அடித்து கொன்று உடலை கடலில் வீசியுள்ளதும் தெரியவந்தது.  படகை ஓட்டிச் சென்ற திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேஷ்(43) என்பவர் போலீஸாரிடம்  சிக்கினார்  அவரிடம் நடத்திய விசாரணையில் அவரை கடலுக்குள் கடத்தி செல்ல தான் படகு ஓட்ட ரூ. 50 ஆயிரம் தனக்கு கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

சுரேஷ் கொடுத்த தகவலின்பேரில் கொலைக்கு உடந்தையாகவும், கொலை செய்யப்பட்ட உடலை கடலில் வீசி தடயத்தை மறைக்கவும் உதவிய திருவொற்றியூரை சேர்ந்த பிரகாஷ்(எ) குடிமி பிரகாஷ்(35), மனோகர்(41) சந்துரு(35), வியாசர்பாடியைச் சேர்ந்த  சதீஷ் குமார்(34), எண்ணூரைச் சேர்ந்த ராஜா(30) உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

காணாமல் போனவர் என பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு 147(வன்முறை செய்தல்),148(பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடல்),302(கொலை),120(b)(கூட்டுச்சதி),34 (கூட்டாக நோக்கத்துடன் செயல்படுதல்) IPC r/w 201(தடயங்களை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   பின்னர் அவர்கள் அனைவரும் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 வழக்கில் தலைமறைவாக இருக்கும் பெண் வழக்கறிஞரை போலீஸார் தேடிவருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் கொலை நடந்ததற்கான காரணம் தெரியவரும். கடலில் வீசப்பட்ட பரத்வாஜின் உடலும் கிடைக்கவில்லை அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x