போரூர் அருகே பரபரப்பு; வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர்: பொதுமக்கள் அலறல்

போரூர் அருகே பரபரப்பு; வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர்: பொதுமக்கள் அலறல்

Published on

வாட்ச்மேனுடன் ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் பயந்துபோய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போரூரை அடுத்த ஐய்யப்பன்தாங்கல் சாய்ராம் நகரில் போகன்வில்லா என்ற அப்பார்ட்மென்ட் உள்ளது. இந்தப் பகுதி மாங்காடு காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. இங்கு பாபு என்பவர் வாட்ச்மேனாகப் பணியாற்றி வருகிறார்.

நேற்றிரவு சுமார் 1 மணி அளவில் போகன்வில்லா குடியிருப்பில் குடியிருக்கும் சூர்யகாந்த் (40) என்பவரின் மனைவி சுனிதா (35) என்பவரைப் பார்க்க, அவரது தம்பி தீபக் (33), கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து வந்துள்ளார்.

காரில் வெகுதூரம் வந்த அவர், அபார்ட்மென்ட் வர நள்ளிரவு  ஆகிவிட்டது. இதனால் அபார்ட்மென்ட் கதவு பூட்டப்பட்டுவிட்டது. தீபக் காரில் இருந்துகொண்டு கதவைத் திறக்க ஹாரன் அடித்துள்ளார். அப்போது வாட்ச்மேன் என்ன விவரம் என்று கேட்டுள்ளார்.

அப்பார்ட்மென்ட் கிரில் கதவைத் திறக்கும்படி வாட்ச்மேனிடம் தீபக் கூறியுள்ளார். நள்ளிரவு நேரம் கதவைத் திறக்க வாட்ச்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாட்ச்மேன் கதவைத் திறக்காததால் ஆத்திரமடைந்த தீபக் தனது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்துவந்து, வாட்ச்மேன் பாபுவை பயமுறுத்தும் வகையில் வானத்தைப் பார்த்து இருமுறை சுட்டுள்ளார். இதைப்பார்த்து மிரண்டுபோன பாபு உள்ளே ஓடிவிட்டார்.

துப்பாக்கிச் சத்தம்கேட்டு மிரண்டுபோன குடியிருப்புவாசிகள், அக்கம் பக்கமிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்து விவரம் கேட்டுள்ளனர். வாட்ச்மேன் பாபு நடந்ததைக் கூறியுள்ளார். இதுகுறித்து காலையில் குடியிருப்போர் சார்பில் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in