Published : 18 Jul 2019 03:02 AM
Last Updated : 18 Jul 2019 03:02 AM

சக அதிகாரியை தாக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்த இன்ஸ்பெக்டர் : ரூ. 25000 அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்

சென்னை வளசரவாக்கம் ஆய்வாளர்  தனது எல்லைக்குள் வராத விபத்து ஒன்றில் ஒரு சார்பாக செயல்பட்ட புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் அவருக்கு ரூ.25000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.  

சென்னை காட்டுப்பாக்கம் செந்தூர்புரத்தைச் சேர்ந்தவர் மனோகரன், சென்னை காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக (SSI) ஆக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனது சகோதரர் சங்கர் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாகவும், அவரது மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதமடைந்ததாக அவர் அழைத்ததன்பேரில் அவரை மீட்க உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரது காயம்பட்ட  சகோதரர் மற்றும் உடன் வந்த நண்பரையும் வளசரவாக்கம் ஆய்வாளராக இருந்த சந்துரு (தற்போது தாம்பரம் காவல் ஆய்வாளர்)  ஜீப்பில் ஏற்றியுள்ளார். விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பாமல் ஏன் காவல் நிலையம் அழைத்து செல்கிறீர்கள்? என்று மனோகரன் கேட்டபோது, காவல் நிலையம் வரும்படி சந்துரு கூறியுள்ளார்.
அங்கு சென்ற மனோகரனை, சந்துரு தாக்கி அமர வைத்து, 3 மணி நேரம் கழித்து அவர்களை விடுவித்துள்ளார். கன்னத்தில், முகத்தில் கடுமையாக தாக்கி அவமானத்திய சந்துரு உன் மீது மேலிடத்தில் புகார் அளித்து சஸ்பெண்ட் செய்ய வைக்கிறேன் பார் என மிரட்டி அனுப்பியுள்ளார்.
அடிபட்ட காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற எஸ்.எஸ்.ஐ மனோகரன் மேற்கண்ட விபரங்களை புகாராக எழுதி மாநில மனித உரிமை ஆணையத்தில் மனுவாக அளித்திருந்தார். தன்னை தாக்கி அவமானப்படுத்திய ஆய்வாளர் சந்துரு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த புகார் மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினரான நீதிபதி துரை ஜெயச்சந்திரன், சந்துருவிடம் விசாரணை நடத்தியபோது விபத்தில் சிக்கியவர்களை காப்பதும், சட்டம் ஒழுங்கை பேணி காப்பதும் தனது கடமை, அன்று நான் அங்கு சென்றபோது எஸ்.எஸ்.ஐ மனோகரன் சத்தம்போட்டு சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வண்ணம் நடந்தார், அதனால் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தேன் என தெரிவித்திருந்தார்.
ஆனால் வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையர் தீர்ப்பில்  சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது  ஆய்வாளர் சந்துரு விசாரணை நடத்திய இடம் வளசரவாக்கம் காவல் எல்லைக்குள் வரவில்லை, அது ராயலா நகர் காவல் எல்லைக்குள் வருகிறது என்றும், விபத்து குறித்து விசாரணை நடத்துவது சட்டம் ஒழுங்கு போலீஸார் வேலை அல்ல, அது போக்குவரத்து போலீஸாரின் கீழ் வருகிறது.

ஆகவே ஆய்வாளர் சந்துரு மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது, ஆகவே அவருக்கு  25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும், இந்த தொகையை தமிழக அரசு மனுதாரர் பாதிக்கப்பட்ட மனோகரனுக்கு  4 வாரத்துக்குள் வழங்கி விட்டு சந்துருவிடமிருந்து வசூலித்துக்கொள்ளலாம் என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை உங்கள் நண்பன் என்பது காகித அளவில் மட்டுமே; நிஜ வாழ்வில் இல்லை என  கேள்வி எழுப்பியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x