Published : 17 Jul 2019 09:21 PM
Last Updated : 17 Jul 2019 09:21 PM

ஏடிஎம் மெஷினில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா பொருத்திய நபர்: போலீஸ் வலைவீச்சு

அயனாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களின் ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய நம்பரை பார்ப்பதற்கு மர்ம நபர் ஒருவர் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமிரா பொருத்தியிருந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அயனாவரம், பங்காரு தெருவில் வசிப்பவர், கோபி கிருஷ்ணன் (45), இவர் ஒரகடத்தில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனத்தில் லாஜிஸ்டிக் மேனேஜராக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 8.45 மணியளவில் அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

செக்யூரிட்டி பாதுகாப்பு இல்லாத ஏடிஎம் மையம் அது. கோபி கிருஷ்ணன் பணம் எடுப்பதற்கு தனது ஏடிஎம் கார்டை மெஷின் உள்ளே செலுத்தியபோது கார்டு சிக்கி கொண்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கார்டை வெளியே இழுத்தபோது கார்டுடன் சேர்ந்து பிளாஸ்டிக் கருவி (skimmer) தனியாக வந்துள்ளது.

ஸ்கிம்மர் கருவி என்பது டேட்டாக்களை திருடும் ஒரு கருவி ஆகும். ஏடிம் மெஷினில் நாம் ஏடிஎம் கார்டை சொருகும் இடத்தில் அதை பொருத்தி விடுவார்கள். அது மெஷினோடு பொருந்தி பார்வைக்கு மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்கும்.

ஆனால் ஒருவர் ஏடிஎம் கார்டை சொருகிய உடனேயே அது அனைத்து தகவல்களையும் கறந்துவிடும். வாடிக்கையாளர் சென்றவுடன் அந்தக்கருவியை பொருத்திய நபர் எடுத்துக்கொள்வார், அதிலிருந்து போலி ஏடிஎம் கார்டை தயாரித்து வேறு மாநிலத்தில் பணத்தை திருடுவார்கள்.  இதை அறிந்து வைத்திருந்த கோபி கிருஷ்ணா உடனடியாக ஸ்கிம்மர் கருவியுடன் போலீஸாருக்கு தகவல் தெரிவிதார்.

அயனாவரம் போலீஸார் உடனடியாக ஏடிஎம் மையத்துக்கு சென்று பார்த்தபோது பணம் எடுக்க வருபவர்களின் ரகசிய நம்பர் அழுத்தும் இடத்திற்கு மேலே மர்ம நபர் ரகசிய கேமிராவையும் பொருத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அதையும் போலீஸார் கைப்பற்றினர்.

ஏடிஎம் மையத்தில் அதை பொருத்திய நபர் யார் என அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம்மில் பணமெடுக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மெஷினில், கார்டு சொருகும் இடத்தில் மாற்றம் எதாவது தெரிந்தால் பணம் எடுக்காமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x