Published : 04 Apr 2025 06:11 PM
Last Updated : 04 Apr 2025 06:11 PM
புதுச்சேரி: விடுமுறைக்கு புதுச்சேரிக்கு வந்த சிறுவன், ஒட்டிய பைக் மோதிய விபத்தில் மற்றொரு சிறுவன் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு இருசக்கர வாகனம் கொடுத்த உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்தச் சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் தரக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் கோபி. இவரது 16 வயது மகன், ஏப்ரல் 2-ம் தேதி இரவு 11 மணிக்கு தனது நண்பர்கள் இருவரை ஸ்கூட்டரில் ஏற்றி கொண்டு, காமராஜர் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த பல்சர் பைக், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், ஸ்கூட்டரில் வந்த 3 சிறுவர்களும், பைக் ஓட்டி வந்த சிறுவனும் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற கோபியின் மகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து உயிரிழந்த சிறுவனின் தாய் சுமித்ரா கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குமார் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய பல்சர் பைக் ஓட்டி வந்தது 16 வயதுக்குட்பட்ட சிறுவன் என்பதும், தமிழகத்தை சேர்ந்த அவர், விடுமுறைக்கு புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் மதன் என்பவரது வீட்டுக்கு வந்திருப்பதும் தெரியவந்தது. சம்பவத்தன்று தனது நண்பரை அழைத்து வர சிறுவனிடம் மதன் பல்சர் பைக் கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீஸார், வழக்குப் பதிந்து, சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த மதன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது மோட்டார் வாகனச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க கூடாது என சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய பல்சர் பைக்கின் பதிவுச் சான்றை ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்ய புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர். விபத்தில் இறந்த சிறுவன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போக்குவரத்து பிரிவு சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி கூறுகையில், “18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக்கூடாது . மீறினால் மிக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே பெற்றோர் அல்லது உறவினர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இந்த சிரமங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment