Published : 03 Apr 2025 07:42 PM
Last Updated : 03 Apr 2025 07:42 PM

ஞானசேகரன் மீதான மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

ஞானசேகரன்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்பான மற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் சம்பவத்தில் கைதாகியுள்ள ஞானசேகரன், ஆளும்கட்சியான திமுக நிர்வாகி. அவர் மீது ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஞானசேகரனுக்கு எதிரான இந்த வழக்குகளை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஞானசேகரனுக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் குறித்த தகவல் இதுவரையிலும் வெளிவரவில்லை. இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்தே போலீஸார் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிராக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகள் குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x