Published : 01 Apr 2025 04:50 AM
Last Updated : 01 Apr 2025 04:50 AM
விருத்தாசலம்: கடலூர், அதர்நத்தம் கிராமத்தில் கள்ளநோட்டு தயாரித்த விசிக பிரமுகரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(39). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக உள்ளார். இவர் தனக்குச் சொந்தமான விளைநிலப் பகுதியில் கொட்டகை அமைத்து அதில் லேப்டாப், பிரிண்டர் வைத்து கள்ளநோட்டு அச்சடிப்பதாக ராமநத்தம் போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராமநத்தம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் நேற்று காலை விளைநிலப் பகுதிக்கு சென்றனர். போலீஸார் வருவதைக் கண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இதையடுத்து போலீஸார் கொட்டகையில் சோதனை நடத்தியதில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் ரூ.83 ஆயிரம் மற்றும் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், லேப்டாப், பிரின்டர் மெஷின், ஏர் கன், ஏர் பிஸ்டல், வாக்கிடாக்கி மற்றும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படும் பேப்பர் பண்டல்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. பொருட்கள் அனைத்தையும் கைப்பற்றிய போலீஸார், தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.
கட்சியில் இருந்து நீக்கம்: இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி, கட்சி பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகக் கூறி செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment