Published : 31 Mar 2025 08:24 PM
Last Updated : 31 Mar 2025 08:24 PM

கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை: இருவரிடம் போலீஸ் விசாரணை

கொலை செய்யப்பட்ட சங்கிலி பாண்டி

கோவில்பட்டி: கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் மீது காரை மோதிய கும்பல், அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த செல்லையா மகன் சங்கிலிபாண்டி (30). இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடம்பூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதற்காக சங்கிலி பாண்டி தனது குடும்பத்துடன் கயத்தாறில் வசித்து வந்தார்.

இவர் இன்று (மார்ச் 31) காலை 9 மணியளவில் கயத்தாறில் இருந்து புறப்பட்டு கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். இந்நிலையில் கயத்தாறு - கடம்பூர் நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி விலக்கு அருகே கார் மோதி விபத்துக்குள்ளாகி சங்கிலி பாண்டி இறந்து கிடப்பதாக கயத்தாறு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையோரம் முட்பதற்குள் கிடந்த சங்கிலி பாண்டி உடலைக் கைப்பற்றி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் செடி கொடிகளில் ரத்தம் சிந்தி இருந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், சங்கிலி பாண்டியின் உடலை பார்வையிட்டபோது, அவரது உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தன.

இதையடுத்து இது விபத்து அல்ல, கொலை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் ‘ஜியா’ மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், கயத்தாறில் இருந்து கடம்பூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற சங்கிலி பாண்டியை காரில் பின்தொடர்ந்த கும்பல், சத்திரப்பட்டி விலக்கு பகுதியில் ஆள் நடமாட்டமில்லாததை பார்த்து மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி உள்ளது. இதில், கீழே விழுந்த சங்கிலி பாண்டியை, காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

இதில் சங்கிலி பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெண் தொடர்பு காரணமாக இந்த கொலை நடைபெற்று இருப்பது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையொட்டி காப்புலிங்கம்பட்டி கிராமத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x