Published : 31 Mar 2025 06:34 PM
Last Updated : 31 Mar 2025 06:34 PM
மதுரை: மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கில் போலீஸ் சுட்டுப் பிடித்த நபருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உசிலம்பட்டி அருகிலுள்ள கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் காவலர் முத்துக்குமார். இவரை உசிலம்பட்டி அருகே 27-ம் தேதி கல்லால் தாக்கி 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. கொலையைத் தடுக்க முயன்ற அவரது நண்பர் ராஜாராம் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடினர்.
இதையடுத்து, தேனி மாவட்டம், கம்பம் மெட்டு பகுதியில் பதுங்கி இருந்த நபர்களை தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது முக்கிய நபரான பொன்வண்ணன் காவலர் ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது, போலீஸார் அவரை நெஞ்சு, வயிறு பகுதியில் சுட்டு பிடித்தனர். தொடர்ந்து அவருடன் தப்பிக்க முயன்ற பாஸ்கரன், அவரது சகோதரர் பிரபாகரன் மற்றும் சிவலிங்கேசுவரன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொன்வண்ணனில் நெஞ்சு, வயிறு பகுதியில் பாய்ந்த குண்டுகள், உடலை துளைத்துக்கொண்டு வெளியேறிது என்றாலும், ஒரு குண்டு நுரையீரலுக்கும், மண்ணீரலுக்கும் இடையில் நின்றது மருத்துவ பரிசோதனையில் தெரிந்தது. மேலும், பொன்வண்ணன் உடலில் பாய்ந்த குண்டு துகள்களால் அவரது வயிற்று பகுதிக்குள் ரத்தக் கசிவை தடுக்க, அவருக்கு வயிற்று பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழுவினர் முடிவெடுத்தனர்.
இதன்படி, நேற்று இரவு பொன்வண்ணனுக்கு சுமார் 4 மணி நேரம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு, குண்டு துகள்களை வெளியேற்றினர். தற்போது அவரது உடல் நலம் முன்னேறி வருகிறது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment