Published : 27 Mar 2025 07:30 PM
Last Updated : 27 Mar 2025 07:30 PM
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இங்கு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தொலைத்தொடர்பு கேபிள்கள் எரிந்து நாசமாகின.
தமிழகத்தில் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இதுதவிர, இந்த ரயில் நிலையத்தின் வழியாக, 200-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் செல்கின்றன. இதன் காரணமாக, இந்த ரயில் நிலையத்துக்கு தினசரி சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றன. காலை முதல் நள்ளிரவு வரை எப்போதும், பரபரப்பாக இருக்கும் இந்த நிலையத்தில் உள்ள தொலைதொடர்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
காந்தி இர்வின் சாலை ஒட்டி அமைந்துள்ள எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்பக்கத்தில் தொலை தொடர்பு அலுவலகம் உள்ளது. இங்கு முதல் தளத்தில் பிற்பகல் 2.40 மணிக்கு திடீரென தீ பிடித்தது. இந்த அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள உயர்மட்ட மின் கம்பி மூலமாக, தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதையடுத்து, ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி, பிரதான பகுதிக்கு விநியோகிக்கப்படும் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதுதவிர, டிக்கெட் கவுன்ட்டர்கள், சிக்னல் தொழில்நுட்பம், அலுவலக போன் இணைப்பு உள்ளிட்டவை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், எழும்பூர் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மற்ற இடங்களில் பரவாமல் தடுத்தனர். பிற்பகல் 3.30 மணிக்குள் தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தொலைதொடர்பு கேபிள்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக, தீவிபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றன. இந்தச் சம்பவத்தால், எழும்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment