Published : 27 Mar 2025 04:58 AM
Last Updated : 27 Mar 2025 04:58 AM
சென்னை: சென்னையில் அடுத்தடுத்து 6 மூதாட்டிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வெளிமாநில இரானி கொள்ளையன் ஜாபர், தரமணி ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். விமானம், ரயிலில் ஏறி தப்ப முயன்ற மற்ற 2 கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சைதாப்பேட்டை, சாஸ்திரி நகர், திருவான்மியூர், கிண்டி, வேளச்சேரியில் மொத்தம் 6 இடங்களில் 6 மூதாட்டிகளிடம் அடுத்தடுத்து செயின் பறிக்கப்பட்டது. திருவான்மியூரில் செயின் பறிப்பின்போது படுகாயமடைந்த மூதாட்டி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க
உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விமானத்தில் தப்ப முயன்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜாபர் உசேன் இரானி (32), மிசம்சா மேசம் இரானி (20), சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் தப்பிய சல்மான் உசேன் இரானி (32) ஆகிய 3 பேர் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டனர்.
பறித்த நகைகள், செயின் பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை மீட்பதற்காக 3 பேரையும் தரமணி பகுதிக்கு திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் புகாரி தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அழைத்துச் சென்றனர். அப்போது, ஜாபர் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கி 2 முறை சுட்டார். இதையடுத்து,
போலீஸார் தற்காப்புக்காக சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜாபர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணையும் நடந்து வருகிறது.
என்கவுன்ட்டர் குறித்து செய்தியாளர்களிடம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் நேற்று கூறியதாவது: கைது செய்யப்பட்ட 3 கொள்ளையர்களும் இரானி கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவர்கள். போலீஸ்போல நடித்து கவனத்தை திசைதிருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவது இவர்களது பாணி. தற்போது பெண்களிடம் நேரடியாக நகை பறித்துள்ளனர். சென்னையில் 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகை பறிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், வயர்லெஸ் மூலம் காவல் அதிகாரிகளை உடனே உஷார்படுத்தினேன். அதற்குள் மேலும் 3 பெண்களிடம் நகை பறிப்பு நடைபெற்றது. கொள்ளையர்கள் தப்பி செல்வதை தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் 56 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் களத்தில் இறக்கப்பட்டனர். 100 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
நகை பறிப்பில் ஈடுபட்டது இரானி கொள்ளையர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. விமானத்தில்தான் அவர்கள் தப்பி செல்வார்கள் என்பதால், கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் ஒரு தனிப்படை உடனே விமான நிலையம் விரைந்தது. ஹைதராபாத் செல்லும் ‘இண்டிகோ’ விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த ஒரு கொள்ளையனை விமான நிலைய காவல் ஆய்வாளர் பாண்டி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற தயாராக விமான நிலையத்தில் காத்திருந்த இன்னொரு கொள்ளையனிடம் சந்தேகத்தின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவரும் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 3-வது கொள்ளையன் விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச் சென்றது தெரியவந்தது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரின் உதவியுடன் ஆந்திர மாநிலம் ஓங்கோல் ரயில் நிலையத்தில் அவரும் கைது செய்யப்பட்டார். சென்னையில் செயின் பறிப்புக்கு அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் கர்நாடக மாநிலம் விதார் பகுதி பதிவு எண் கொண்டது.
அவர்களது இருசக்கர வாகனத்தை மீட்க சென்றபோது, என்கவுன்ட்டர் நடந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையன் ஜாபர் மீது மும்பையில் 50-க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர் ஏற்கெனவே சென்னைக்கு வந்திருக்கலாம் என்று கருதுகிறோம். அவர்தான் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இரானிய கொள்ளை கும்பலில் மிக முக்கியமான 20 பேர் பட்டியலில் 3-வது இடத்தில் ஜாபர் இருந்துள்ளார். அவரது உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அவரது உடல் ஒப்படைக்கப்படும்.
சென்னையில் 5,500 ரவுடிகள்: சென்னையை பொருத்தவரை, ரவுடிகள் பட்டியலில் 68 ‘ஏ பிளஸ்’ ரவுடிகள் உட்பட மொத்தம் 5,500 குற்றவாளிகள் உள்ளனர். அதுபோன்ற ரவுடிகள், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருமங்கலம் காவல் நிலையத்தில் நடந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக காவல் உதவி ஆணையர், எஸ்.ஐ. மீது விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், நுண்ணறிவு இணை ஆணையர் தர்மராஜன், துணை ஆணையர் ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
அருண் உத்தரவில் 4-வது என்கவுன்ட்டர்: சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா கொல்லப்பட்ட நிலையில், தற்போது இரானி கொள்ளையன் ஜாபர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
காட்டி கொடுத்த ‘ஷூ’-வெளி மாநிலத்துக்கு தப்பும் திட்டத்துடன் 3 பேரும் முதலில் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். போலீஸ் பிடியில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் 3 பேரும் உடைகளை மாற்றியுள்ளனர். ஆனால், ஷூவை மாற்றவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஏற்கெனவே அவர்களது அடையாளத்தை உறுதிசெய்திருந்த போலீஸாருக்கு, ஷூதான் அவர்களை காட்டிக் கொடுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...