Published : 26 Mar 2025 08:05 PM
Last Updated : 26 Mar 2025 08:05 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் நகர திமுக செயலர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீரவநல்லூர் பசும்பொன்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் என்ற ரத்தினவேல்பாண்டியன். வீரவநல்லூர் நகர திமுக செயலராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2000-ம் ஆண்டில் வீரவநல்லூர் அருகே கிளாக்குளத்தை சேர்ந்த சிலர், வீரவநல்லூர் யாதவர் நடுத்தெருவை சேர்ந்த சுப்பையாதாஸின் தந்தை சந்தனம், அவரது நண்பர் ராமையா ஆகியோரை கொலை செய்தனர். இதற்கு பழிக்கு பழியாக கிளாக்குளத்தில் ஆதிமூலப்பாண்டியன் மற்றும் அவரது நண்பர் கொலை செய்யப்பட்டனர்.
இதற்கு பழிதீர்க்கும் வகையில் 2009-ம் ஆண்டில் ஐயப்பன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வாறு 9 ஆண்டுகளில் சாதிய மோதலில் 5 பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக ரத்தினவேல்பாண்டியன் செயல்பட்டதால், அவர் மீது மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆத்திரமுற்றதாக தெரிகிறது. இந்நிலையில், வீரவநல்லூர் பத்திரகாளியம்மன் கோயில் தெருவிலுள்ள சலூன் கடை அருகே 2011-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி ரத்தினவேல்பாண்டியன் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வீரவநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து வீரவநல்லூர் சந்தனம் மகன் சுப்பையாதாஸ் (38), பொன்னையாதாஸ் மகன் சுரேஷ் (37), அருணாச்சலம் மகன் சுரேஷ் (37), கொம்பன் மகன் கொம்பையா (38) உள்ளிட்ட 21 பேரை கைது செய்யதனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதாலது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது அவர்களில் 4 பேர் இறந்துவிட்டனர்.
இந்த வழக்கை நீதிபதி பத்மநாபன் விசாரித்து சுப்பையாதாஸ், சுரேஷ், மற்றொரு சுரேஷ், கொம்பையா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 12 பேர் விடுவிக்கப்பட்டனர். வீரவநல்லூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீதான வழக்கு தனி வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment