Published : 26 Mar 2025 02:39 PM
Last Updated : 26 Mar 2025 02:39 PM

சென்னை செயின் பறிப்பு சம்பவம் முதல் என்கவுன்ட்டர் வரை: நடந்தது என்ன? - காவல் ஆணையர் விளக்கம்

சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்தார் | படம்: அகிலா ஈஸ்வரன்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மும்பையைச் சேர்ந்த ‘இரானி’ கொள்ளைக் கும்பல், என்றும் அவர்களிடமிருந்து 6 சம்பவங்களில் பறிபோன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளது, என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

காவல்துறை எச்சரிக்கை: நேற்று (மார்ச் 25) காலை சைதாப்பேட்டையில் ஆரம்பித்து 6 செயின் பறிப்பு கொள்ளை நடந்தது. காலை 6 மணிக்கு துவங்கி 7 மணி வரை இந்த 6 சம்பவங்களும் நடந்திருக்கிறது. இந்த தகவல் கிடைத்தவுடனே, சென்னை மாநகரம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே தாம்பரம் அருகே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால், வெளிமாநில கொள்ளையர்களாக இருக்க வாய்ப்புள்ளது எனக் கருதி, விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ வாகன நிறுத்தங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நகைகள் மீட்பு: அதேபோல, சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது குற்றவாளிகளின் அடையாளங்கள் தெரிந்தது. அதைவைத்து சென்னை விமான நிலையத்தில் இருவரை கைது செய்தோம். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு குற்றவாளி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஓங்கோல் நோக்கி சென்று கொண்டிருந்த கொள்ளையனை ஓங்கோலில் ஆர்பிஎஃப் உதவியுடன் பிடித்தோம். அவர்களிடம் இருந்து 6 செயின் பறிப்புச் சம்பவங்களிலும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் மீட்டுள்ளோம்.

‘இரானி’ கொள்ளைக் கும்பல்: இந்த மூவருமே, ‘இரானி’ கொள்ளையர்கள் என்று சொல்லக்கூடிய மும்பையை மையமாகக் கொண்டவர்கள். இவர்கள் நிறைய இடங்களில் உள்ளனர். அவர்கள் அதிகமாக இருப்பது மும்பை. சென்னையில் பிடிப்பட்டவர்கள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள்தான். மும்பை காவல் துறையிடம் விசாரித்ததில் இது பெரிய கும்பல் என்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளில் இருவர் செவ்வாய்க்கிழமை காலையில் தான் வந்துள்ளனர். இதில் ஒருவர் 2 மணிக்கும், மற்றொருவர் காலை 4 மணிக்கும் விமான நிலையம் வந்துள்ளனர். பின்னர் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த 3-வது குற்றவாளியின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த மூவரில் இருவர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இன்னொருவர் கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கர்நாடகா மாநிலம் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்தது. அது திருட்டு வண்டியா? அல்லது அங்கிருந்து வாங்கிய வண்டியா என்பது போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த குற்றச்சம்பவத்தில் இதுவரை 3 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொள்ளைக் கும்பல் குறித்து விசாரித்து வருகிறோம். ராம்ஜி நகர் குற்றவாளிகள் போல இவர்கள் இந்தியா முழுவதும் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய கும்பல்.

இதுவே முதல் முறை: இந்த குற்றவாளிகள் சென்னையில் உள்ள சாலைகளில் சர்வசாதாரணமாக பயணித்துள்ளதைப் பார்க்கும்போது, இவர்கள் ஏற்கெனவே இங்கு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதற்கு வாய்ப்பு இருக்கிறது. விசாரித்து வருகிறோம். என்னுடைய அனுபவத்தில், இதற்கு முன்பு இருந்த இரானி கொள்ளையர்கள் அனைவரும் கவனத்தை திசைத்திருப்புவதைத்தான் மேற்கொள்வார்கள். செயின் பறிப்பு, கொள்ளைச் சம்பவங்கள் எல்லாம் இந்தமுறைதான் வந்திருக்கிறது.

26 சவரன்... சென்னையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், ஓங்கோலில் பிடிப்பட்ட கொள்ளையரை சென்னைக்கு போலீஸார் அழைத்து வருகின்றனர். அவரிடம் சில நகைகள் இருக்கிறது. மற்ற இரண்டு நபர்களும் எஞ்சிய நகைகளை சரிபாதியாக பிரித்துக் கொண்டுள்ளனர். மொத்தம் 6 செயின் சுமார் 26 சவரன் நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது. இந்த செயின் பறிப்புச் சம்பவத்தில், ஒரு 65 வயது பெண்மணி மட்டும் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சென்னையில் செயின் பறிப்பு... தற்போதுள்ள சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்திதான், இந்த குற்றவாளிகளை அடையாளம் கண்டோம். நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தோம். சென்னையைப் பொருத்தவரை, இந்தாண்டு இதற்கு முன்பாக 7 செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த 7 சம்பவங்களிலும் உள்ளூர் குற்றவாளிகள் அவர்களைக் கண்டுபிடித்துவிட்டோம். கடந்தாண்டு சென்னையில் நடந்த செயின் பறிப்புச் சம்பவங்கள் 34. இதில், 33 சம்பவங்களைக் கண்டுபிடித்துவிட்டோம்.

எனவே, இந்த கும்பல் வேறு எங்காவது, இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சென்னையைப் பொருத்தவரை கண்டுபிடிக்கப்படாத செயின் பறிப்புச் சம்பவங்கள் என்பது இல்லை. இந்த வழக்குக்கு மட்டும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. குற்றம் நடந்து 3 மணி நேரத்துக்குள் பிடித்துவிட்டோம்.

என்கவுன்ட்டர் நடந்தது எப்படி?- துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவலர்கள் யாரும் காயம்படவில்லை. கொள்ளையர் கையில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அதில் அவர் இரண்டு ரவுண்டு போலீஸாரை நோக்கிச் சுட்டிருக்கிறார். அது காவலர்கள் மீது படாமல், காவல்துறை வாகனம் மீது பாய்ந்து சேதமடைந்தது. கொள்ளையன் மீண்டும் தங்களை நோக்கி சுட்டுவிடக்கூடாது, என்று போலீஸார் ஒரு ரவுண்டு மட்டும் சுட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி துப்பாக்கியை இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்தார்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x