Published : 26 Mar 2025 06:45 AM
Last Updated : 26 Mar 2025 06:45 AM

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

நேற்று நகை பறித்துவிட்டு பைக்கில் தப்பிச் செல்லும் உத்தரப்பிரதேச கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி பதிவு.

சென்னை: சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

சென்னையில் நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடைபெற்றன.

இப்படி காலை 6 முதல் 7.10 மணிக்குள் சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து மூதாட்டிகளை குறிவைத்து நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் செயின் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்புத் துலக்கினர்.

இதில், நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேர் மட்டுமே எனத் தெரியவந்தது. மேலும், அவர்கள் சென்னை விமான நிலையம் நோக்கி சென்றதும் தெரிந்தது. எனவே, இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், புறப்படத் தயாராக இருந்த ஐதராபாத் மற்றும் மும்பை விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. உடனடியாக போலீஸார் சம்பந்தப்பட்ட விமானங்களுக்குள் நுழைந்து ஆய்வு செய்தனர்.

அதில், 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், கொள்ளையர்களான இருவரும் திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன் என்ற நபர் இன்று அதிகாலை போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்ட இவர், விசாரணையில் தரமணி ரயில் நிலையம் அருகே நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை மீட்க போலீசார் ஜாபர் குலாம் ஹுசைனை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்

அப்போது, அவர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளர் முகமது புகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜாபர் குலாம் ஹுசைன் உயிரிழந்ததுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. ஜாபர் மீது நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x