Published : 26 Mar 2025 12:49 AM
Last Updated : 26 Mar 2025 12:49 AM

1 மணி நேரத்தில் 6 மூதாட்டிகளிடம் நகை பறிப்பு: விமானத்தில் தப்ப முயன்ற உ.பி. கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

நகை பறித்துவிட்டு பைக்கில் தப்பிச் செல்லும் உத்தரப்பிரதேச கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி பதிவு.

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 மூதாட்டிகளிடம் அடுத்தடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட உ.பி. கொள்ளையர்கள் இருவர் விமானத்தில் தப்ப முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா (54). இவர் நேற்று காலை 6 மணிக்கு நந்தனம், பெர்னபெட் 2-வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்து ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், இந்திரா கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பினர்.

அடுத்த 30 நிமிடங்களில் அடையாறு பரமேஸ்வரி நகர், 3-வது தெருவைச் சேர்ந்த அம்புஜம்மாள் (66) என்பவர் அடையாறு சாஸ்திரி நகர், 1-வது அவென்யூ அருகே சென்று கொண்டிருந்தபோது இதே பாணியில் 3 கிராம் செயின் பறிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த 15 நிமிடங்களில், அதாவது 6.45 மணிக்கு பெரியார் நகரைச் சேர்ந்த லெட்சுமி (54), அடையாறு இந்திரா நகர் 29-வது குறுக்குத் தெருவில் செல்லும்போது 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.

இதேபோல கிண்டி பாரதி நகரைச் சேர்ந்த நிர்மலா (60) காலை 7 மணிக்கு கிண்டி எம்ஆர்சி புதுக்கோயில் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது 10 பவுன் செயின் பறிக்கப்பட்டது. அடுத்த 10 நிமிடத்தில் மேடவாக்கம் சந்தோஷ் புரத்தைச் சேர்ந்த விஜிதா (72) வேளச்சேரி டான்சி நகர் 12-வது தெருவில் சென்று கொண்டிருந்தபோது 2 பவுன் செயின் பறிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் வேளச்சேரி மேட்டுத் தெருவைச் சேர்ந்த முருகம்மாள் (55) என்பவர் வேளச்சேரி விஜயா நகர் வடக்கு விரிவாக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.

இப்படி காலை 6 முதல் 7.10 மணிக்குள் சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து மூதாட்டிகளை குறிவைத்து நடைபெற்ற 6 செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதுகுறித்து சைதாப்பேட்டை, சாஸ்திரி நகர், திருவான்மியூர், கிண்டி, வேளச்சேரி ஆகிய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் செயின் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்புத் துலக்கினர்.

இதில், நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேர் மட்டுமே எனத் தெரியவந்தது. மேலும், அவர்கள் சென்னை விமான நிலையம் நோக்கி சென்றதும் தெரிந்தது. எனவே, இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், புறப்படத் தயாராக இருந்த ஐதராபாத் மற்றும் மும்பை விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. உடனடியாக போலீஸார் சம்பந்தப்பட்ட விமானங்களுக்குள் நுழைந்து ஆய்வு செய்தனர்.

அதில், 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், கொள்ளையர்களான இருவரும் திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட நேரத்துக்குள் நகை பறிப்பில் ஈடுபட்டுவிட்டு விமானத்தில் தப்பிச் செல்ல விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

மேலும் போலீஸில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கின்றனர். அவர்கள் இதுபோல் பலமுறை வந்து நகை பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவர்களுடன் மேலும் சிலரும் சேர்ந்து இந்த நகை பறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x