Published : 24 Mar 2025 07:25 PM
Last Updated : 24 Mar 2025 07:25 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 4 பள்ளிக் குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் நர்சரி வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 3.30 மணியளவில் பள்ளி முடியும். இன்று (மார்ச் 24) வழக்கம் போல் பள்ளி முடிந்து போகனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, நர்சரி வகுப்புகளில் படிக்கும், 9 மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் புறப்பட்டது.
வேப்பனப்பள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி, பந்திகுறியை சேர்ந்த சந்துரு (22) என்பவர் வேனை ஓட்டிச் சென்றார். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், எம்.சாண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர் திடீரென நின்றது. அந்த டிராக்டரை பின் தொடர்ந்து சென்ற பள்ளி வேன், கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் அமர்ந்திருந்த குழந்தைகள் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து குழந்தைகளை மீட்டனர்.
தகவலறிந்து கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சின்னசாமி மற்றும் போலீஸார் வந்தனர். படுகாயமடைந்த குழந்தைகள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் படுகாயமடைந்த எல்கேஜி மாணவர் ஹர்னிஷ்(4) இறந்தார். அதேபோல, டிராக்டரில் அமர்ந்து சென்ற பெரியமோட்டூரை சேர்ந்த கூலித் தொழிலாளி விஜயா(45) என்பவர் தவறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், தனியார் பள்ளியில் பயிலும், போகனப்பள்ளி ஷர்வேஷ் (7), சுபேதார்மேடு காருண்யா (3), அனிஷ்கா (3), மணீஷ்(8) ஆகிய 4 குழந்தைகள் படுகாயமடைந்தனர். பள்ளி வேன் ஓட்டுநர் சந்துரு மற்றும் 4 பள்ளி குழந்தைகள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்றுவரும் பள்ளி குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், எஸ்.பி. தங்கதுரை ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment