Published : 24 Mar 2025 06:45 AM
Last Updated : 24 Mar 2025 06:45 AM

ரவுடி கணவர் அடிக்கடி கைதானதால் விரக்தி: சென்னையில் பெண் காவலர் தற்கொலை

செல்வி

சென்னை: சென்னை புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் செல்வி (39). இவர், புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த 21-ம் தேதி பணிநிமித்தமாக நீதிமன்றத்துக்கு சென்றவர் பின்னர் திரும்பவில்லை. இதனால், சக போலீஸார் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீஸார் சென்றனர். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமாக தட்டியும் திறக்கவில்லை.

இதுகுறித்த தகவலின்பேரில் புளியந்தோப்பு போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் செல்வி சடலமாக தொங்கினார். இதையடுத்து, உடலை பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸார், வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் தகவல்கள் வெளியாகின.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, அவரது உறவினரான நல்லுசாமி (41) என்பவரை 2004-ல் காதல் திருமணம் செய்தார். பின்னர் 2008-ல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். சிவகங்கை, தேவக்கோட்டை, திருப்பத்தூரில் பணியாற்றிய செல்வி பின்னர் சென்னைக்கு வந்தார்.

அவரது கணவர் நல்லுசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்துள்ளன. இவர், ஏ பிளஸ் ரவுடி பட்டியலிலும் இருந்துள்ளார். இதனால், அடிக்கடி அவரைத் தேடி வெவ்வேறு மாவட்ட போலீஸார் வந்துள்ளனர். மேலும், அவ்வப்போது கைது செய்யப்பட்டும் சிறையில் அடைக்கப்படுவார். இதனால் வேதனை அடைந்த செல்வி கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

இதை கண்டறிந்த மதுரை போலீஸார் வாரண்ட் தொடர்பாக நல்லுசாமியை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர் சிவகங்கையிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கொலையில் நல்லுசாமிக்கு தொடர்பு இருக்கலாம் என அம்மாவட்ட போலீஸார் சந்தேகம் அடைந்தனர்.

இதுதொடர்பாக விவரத்தை கேட்டு செல்வியும் நல்லுசாமியும் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கணவரின் செயல்பாடுகளாலும் அடிக்கடி போலீஸாரால் அவர் கைது செய்யப்படுவதாலும் கடும் விரக்தி அடைந்த நிலையில் செல்வி தற்கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x