Published : 23 Mar 2025 11:01 AM
Last Updated : 23 Mar 2025 11:01 AM
போலி ஆவணங்களைச் சமர்பித்து தனியார் வங்கியில் ரூ.1.04 கோடி மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் திவ்யன் குமார் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘தனியார் நிறுவனத்தில் மென் பொருள் பொறியாளர்களாகப் பணிப்புரிவதாகக் கூறி, கேசவ கங்காராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போலியான ஊதிய சான்றுகளை தயார் செய்து, எங்கள் வங்கியில் சமர்ப்பித்து, தனி நபர் கடன் பெற்று அதை வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி உள்ளனர்.
மேலும், எங்கள் வங்கியில் கடன் பெறுவதற்காக குமார் என்பவர் போலியான ஆவணங்களை, அவர்களுக்குத் தயார் செய்து கொடுத்து, அதை வங்கியில் சமர்ப்பித்து கடன் பெற்று, கமிஷன் தொகையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் வங்கிக்கு கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், ரூ.1,04,64,370 இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆந்திராவைச் சேர்ந்த குமார் (29), ஏகாம்பரம் (27), கேசவ் கங்காராஜ் (25), கிருஷ்ணமூர்த்தி (24) ஆகியோர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறி, பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ.2,47,85,000 பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment