Published : 22 Mar 2025 07:12 AM
Last Updated : 22 Mar 2025 07:12 AM
சென்னை: தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி சென்னையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். சென்னை வேளச்சேரி தரமணி இணைப்பு சாலையில் கடந்த 14-ம் தேதி வேளச்சேரி போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வாகனத்தில் வந்த தூத்துக்குடி வினோத், சென்னை மணலி பாலமுருகன், மாதவரம் சுரேஷ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், இவர்கள் ஆதம்பாக்கத்தில் நகைக்கடை அதிபர் ஒருவரை கொன்று நகை கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலை, கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டது தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து, தென் சென்னை இணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார் நெல்லை சந்தை பகுதியில் பதுங்கி இருந்த மகாராஜாவை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர் கொள்ளயடிப்பதற்காக இருசக்கர வாகனமும் துப்பாக்கி ஒன்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மகாராஜாவை அழைத்துக் கொண்டு தனிப்படை போலீஸ் எஸ்ஐ பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்றனர்.
அங்கு சென்றதும் திடீரென இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த மகாராஜா, என்னை பிடிக்க முயன்றால் சுட்டு கொன்று விடுவதாக கூறி துப்பாக்கி பட்டனை அழுத்தினார். அதில், தோட்டாக்கள் இல்லாததால் வெடிக்கவில்லை. இதையடுத்து, கீழே கிடந்த கற்களை எடுத்து போலீஸாரை நோக்கி சரமாரியாக வீசியுள்ளார். இதில் காவல் வாகன கண்ணாடிகள் நொறுங்கின.
இதையடுத்து, எஸ்ஐ பாலகிருஷ்ணன் தனது கைத் துப்பாக்கியை காண்பித்து சரணடையுமாறு பலமுறை எச்சரித்தும் மகாராஜா தொடர்ந்து கற்களை வீசியபடியே இருந்துள்ளார். இதையடுத்து தற்காப்புக்காக அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார். இதையடுத்து, அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஜாவின் பின்னணி: ஐகோர்ட் மகாராஜா முதலில் பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் முத்துமாரி என்ற இளம்பெண்ணை காதலித்துள்ளார். அவர், திருமணத்துக்கு நெருக்கடி கொடுத்ததால் அவரை 2017-ல் கொலை செய்தார். இந்த கொலையில் சிறை சென்றவர் பின்னர், ஜாமீனில் வந்து ரூ.5 லட்சம் கேட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கடத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் தூத்துக்குடி சிறையிலிருந்து நீதிமன்றம் சென்று திரும்பும்போது, விளாத்திகுளத்தில் வைத்து அவரது நண்பர் அழகுராமரும் மனைவி பிரியதர்ஷினியும் சேர்ந்து போலீஸார் மீது மிளகாய் தூளை தூவி மகாராஜாவை அழைத்து சென்றனர். பின்னர், தனது இருப்பிடத்தை மதுரைக்கு மாற்றினார் மகாராஜா.
அங்கு அழகு நிலையம் நடத்தி வந்த குஜராத் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யாவுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது செங்கல்பட்டு ரவுடி சரவணனை தாக்கி அவரிடம் இருந்த சூர்யாவின் கார் மற்றும் 250 பவுன் நகைகளை மீட்டுத் தந்தார். இதனால், இருவருக்கும் நெருக்கம் அதிகமானது.
இந்த சூழலில் மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவரின் 14 வயது மகனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் சூர்யாவும் சேர்க்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு இவர் மீது 9 குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment