Published : 18 Mar 2025 07:06 AM
Last Updated : 18 Mar 2025 07:06 AM
சென்னை: 5 ஆண்டுகளில் நிலுவை மின் கட்டணம் ரூ.2.10 லட்சம் செலுத்த முடியாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை, நல்லான் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் (43). இவர் குடும்பத்துடன் இரண்டு தளங்கள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் வீட்டுக்கு பயன்படுத்தி வந்த மின்சாரத்துக்கு 2020 முதல் 2025 வரை மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இதை மின் வாரிய ஊழியர்கள் கவனக்குறைவால் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் இதை கண்டுபிடித்த மின்வாரிய ஊழியர்கள், மின் கட்டணம் செலுத்தப்படாத 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு ரூ.2.10 லட்சத்தை உடனடியாக கட்டும்படி தெரிவித்துள்ளனர். ஆனால், அவரிடம் அவ்வளவு பணம் இல்லாததாலும், பணத்தை திரட்ட முடியாததாலும் நிலுவை மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன் விஜயகுமார் வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண தொகையை செலுத்துவதற்காக உறவினர் மற்றும் தெரிந்தவர்களிடம் பணம் கேட்டும் கிடைக்காததால் விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டுராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் விஜயகுமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாணவி தற்கொலை: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆஷியா (19). இவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி தேர்வு எழுதி கொண்டிருந்தபோது அவர் தேர்வு அறையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர், கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார்.
இந்த சம்பவத்தில் மாணவியின் இடுப்பு மற்றும் கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக மாணவி ஆஷியா மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் 022-25521111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மனநல ஆலோசகர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment