Published : 16 Mar 2025 02:15 AM
Last Updated : 16 Mar 2025 02:15 AM
மன்னார்குடி அருகே மூதாட்டியை வாட்ஸ்அப் வீடியோ காலில் அழைத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக சிபிஐ பெயரில் மிரட்டி, ரூ.21 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள திருமக்கோட்டையைச் சேர்ந்தவர் பைரவமூர்த்தி மனைவி திலகவதி(70). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவரது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இதனால், திலகவதி தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி திலகவதியின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோகாலில் தொடர்புகொண்ட ஒரு நபர், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டார். மேலும், “உங்களின் செல்போன் எண், ஆதார் எண் ஆகியவை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் பதிவாகியுள்ளன. தேசவிரோத குற்றவாளிகளிடம் உங்களின் செல்போன் எண் உள்ளது. இது தொடர்பாக உங்களையும், வெளிநாட்டில் உள்ள உங்களின் 2 மகள்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருக்க லஞ்சம் கேட்ட அந்த நபர், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் அச்சமடைந்த திலகவதி, அந்த நபர் கூறிய பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் பல தவணைகளாக ரூ.20,95,505 அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே, தொடர் மிரட்டல் காரணமாக மன உளைச்சல் அடைந்த திலகவதி, திருவாரூர் சைபர் க்ரைம் போலீஸாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோசடி கும்பலைத் தேடி வருகின்றனர்.
“ஆன்லைன் தொழில் வாய்ப்பு, சிபிஐ, மும்பை போலீஸ் என பலர் பேசி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, செல்போனில் யாராவது மிரட்டல் விடுத்தால், அவர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டாம். அச்சப்படாமல் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என பொதுமக்களுக்கு திருவாரூர் எஸ்.பி. கருண் கரட் அறிவுரை வழங்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment