Published : 13 Mar 2025 01:19 AM
Last Updated : 13 Mar 2025 01:19 AM
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 3-வது குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியில் கடந்த 6-ம் தேதி இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலா பயணி, 28 வயதான சுற்றுலா வழிகாட்டி ஆகிய 2 பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஒடிசா சுற்றுலா பயணி பிபாஷ் குமாரை 3 இளைஞர்கள் தாக்கி, சனாப்பூர் கால்வாயில் தள்ளிவிட்டனர். இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கொப்பல் மாவட்ட போலீஸார் கங்காவதியை சேர்ந்த சாய் மல்லு (27), சேத்தன் சாய் (26) ஆகிய 2 பேரை கடந்த 8-ம் தேதி கைது செய்தனர். தலைமறைவான இருந்த சரவண பசவா (27) என்பவரை பெல்லாரி, பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் 2 தனிப்படை போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில் அவர் சென்னைக்கு ரயில் மூலம் தப்பி சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விரைந்த போலீஸார் நேற்று அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து கொப்பல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் எல் அரசித்தி கூறுகையில், ''தலைமறைவான சரவண பசவாவிடம் செல்போன் இல்லாததால் அவரை கண்காணிப்பதில் சிரமம் இருந்தது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அவர் ரெய்ச்சூர் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு நபரின் செல்போனை வாங்கி, தனது நண்பர் ஒருவருக்கு செல்போனில் பேசினார். அப்போது தனது வங்கி கணக்குக்கு பணம் அனுப்புமாறு கேட்டார்.
இதையடுத்து அவர் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து அந்த நண்பருடன் பேசினார். அந்த செல்போன் எண்களின் டவர்களை வைத்து கண்காணித்தபோது, அவர் சென்னை ரயிலில் பயணம் செய்வது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது, அவர் ரயிலில் இருந்து இறங்கி வெளியே சென்றார். சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று அங்கிருந்து தனது நண்பர்களுடன் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை போலீஸாரின் உதவியுடன் அவரை மெரினா கடற்கரையில் கைது செய்தோம். அவரை கொப்பல் அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment