கஞ்சா வியாபாரியை விரட்டி பிடித்த சென்னை போலீஸார்!
சென்னை - வியாசர்பாடியில் தப்பியோடிய கஞ்சா வியாபாரியை போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி பிவி காலனி பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக எம்கேபி நகர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பீலிக்கான் முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒருவர் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருப்பதை கண்ட போலீஸார், அந்த நபரின் அருகில் சென்றனர். உடனே, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து போலீஸார், அவரைப் பிடிக்க விரட்டிச் சென்றனர். அப்போது, அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, போலீஸை வெட்ட முயன்றார். அவரிடம் இருந்து தப்பிய போலீஸார், அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன்(36) என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
