Published : 20 Feb 2025 01:00 PM
Last Updated : 20 Feb 2025 01:00 PM
சென்னை: நுங்கம்பாக்கம் தொழில்அதிபர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து ரூ. 2 கோடி தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் லேக் வியூ அவென்யூ பகுதியில் வசிப்பவர் அபுபக்கர். இவர் துபாயில் டிரேடிங் நிறுவனம் தொழில் செய்து வருகிறார். மேலும் இரண்டு அடுக்குமாடிகள் கொண்ட வீட்டின் முதல் மாடியில் இவர் வசித்து வருகிறார். 2-வது மாடி வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
தனது மாமனார் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஆங்கில புத்தாண்டு விடுமுறைக்காக கடந்த டிசம்பர் மாதம் சொந்த ஊரான ராமநாதபுரம் கீழக்கரைக்கு சென்றனர். ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த சுமார் ரூ. 2 கோடிக்கும் மேலான தங்க, வைர நகைகள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து நுங்கம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் எப்படி வீட்டிற்குள் வந்தனர்? எப்படி தப்பிச் சென்றார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் வீட்டின் நுழைவு கதவு வழியாக ஏறி முதல் மாடிக்கு சென்று கைவரிசை காட்டியிருப்பதாக போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டனர். இந்த நிலையில் கொள்ளை தொடர்பாக அந்த வீட்டின் கார் ஓட்டுனரான சந்திரபரியார் என்பவரை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த சாந்தா என்பவர் தான் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. கார் ஓட்டுனர் சந்திரபரியார் தனது குடும்பத்தினரை வரழைத்து சாந்தா திட்டத்தின்படி தொழில் அதிபர் அபுபக்கர் வீட்டில் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கொள்ளையடித்த தங்க வைர நகைகளோடு சாந்தா, மற்றும் குடும்பத்தினர் தீபக், கோரக் சாய், பபித்ரா, ஷாலினி ஆகிய 5 பேரும் நேபாளத்திற்கு தப்பி ஓடி விட்டனர். சாந்தா இந்த வீட்டில் பணிக்கு சேர்ந்து 5 நாட்களில் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு தொழில்அதிபர் அபுபக்கரிடம் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் நடத்திய விசாரணையில், கைதான கார் ஓட்டுனர் சந்திரபரியார் மீது ஐதராபாத்தில் வீட்டில் வேலைக்கு சேர்ந்து வீட்டின் உரிமையாளரை தாக்கி விட்ட 2 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. நேபாள குடும்ப கும்பல் இது போல பெரிய தொழில்அதிபர் வீடுகளில் வேலைக்கு சேர்ந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான கார் ஓட்டுனர் சந்திரபரியாரை நுங்கம்பாக்கம் போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகிற மார்ச் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய 5 பேரை பிடிக்க தனிப்படை போலீஸார் நேபாளத்திற்கு சென்றனர். ஆனால் போலீஸார் வருவதை அறிந்து நேபாளத்தில் ஒரு கிராமத்திற்குள் சென்று பதுங்கி கொண்டதாக கூறப்படுகிறது. அந்த கிராமம் குற்றவாளிகள் அதிகம் பேர் பதுங்கி இருக்கும் பகுதி என்பதால் தனிப்படை போலீஸார் அங்கு செல்ல முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனிப்படை போலீஸார் சென்னை திரும்பி உள்ளனர். மேலும் முறையாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நேபாள போலீஸாரின் உதவியோடு அந்த கொள்ளை கும்பலை பிடிக்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கண்ட தகவல் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment