Published : 18 Feb 2025 07:00 PM
Last Updated : 18 Feb 2025 07:00 PM
கோவை: கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
கோவை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து வந்த இவர், குடும்பச் சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டார். தனது தாத்தா உயிரிழந்ததால் பாட்டிக்கு துணையாக அவரது வீட்டில் இச்சிறுமி தங்கி வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு சிறுமி மாயமானார். இதையடுத்து சிறுமியின் பாட்டி, பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுமி மாயம் குறித்து அவரது பாட்டி, உக்கடம் போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். சிறுமியின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மறுநாள் அதிகாலை சிறுமி வீட்டுக்கு வந்தார். அவரிடம் பெற்றோர் மற்றும் பாட்டி விசாரித்த போது, நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்ததாக கூறினார். தொடர்ந்து உக்கடம் போலீஸார், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, சமூக வலைதளம் மூலம் பழக்கமான கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றிருந்தாகவும், அங்கு கல்லூரி மாணவர்கள் 7 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதுகுறித்து விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறும்போது, “மாயமானது தொடர்பாக சிறுமியிடம் விசாரிக்கப்பட்டது. சிறுமிக்கு ஸ்னாப்சாட் எனப்படும் சமூக வலைதள செயலி பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதன் மூலம் கோவையில் உள்ள கோவைப்புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெபின் (20), ரக்ஷித் (19) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
தொடர்ந்து சில நாட்கள் பேசிய பின்னர், அந்த சிறுமியை தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறு சிறுமியை அழைத்துள்ளனர். அதன்படி, கடந்த 16-ம் தேதி சிறுமி, மேற்கண்ட இருவருடன் சேர்ந்து அவர்கள் தங்கியுள்ள அறைக்குச் சென்றுள்ளார். அந்த அறையில் அபினேஷ்வரன்(19), தீபக் (20), யாதவ்ராஜ் (19), முத்து நாகராஜ் (19), நித்தீஷ் (19) ஆகிய மேலும் 5 மாணவர்கள் இருந்துள்ளனர்.
தொடர்ந்து மேற்கண்ட 7 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டாகவும், தனித்தனியாகவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து சிறுமி மாயம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஜெபின், ரக்ஷித், அபினேஷ்வரன், தீபக், யாதவ்ராஜ், முத்து நாகராஜ், நித்தீஷ் ஆகியோர் இன்று (பிப்.18) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் திருநெல்வேலி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இவர்கள் 7 பேரும் கோவைப்புதூர், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு படித்து வருபவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறுமியை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...