Published : 13 Feb 2025 05:37 AM
Last Updated : 13 Feb 2025 05:37 AM
சென்னை: சென்னை துறைமுகம் வழியாக ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சைப் பட்டாணி முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில், சுங்கத் துறை அதிகாரிகள் 3 பேர் உட்பட 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் கொள்கைப்படி, பச்சைப் பட்டாணியை கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். ஒரு கிலோ பச்சைப் பட்டாணி இறக்குமதி செய்ய ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதிகாரிகள் உதவி: இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் இறக்குமதி கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக, ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சைப் பட்டாணியை துபாயில் இருந்து சென்னை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்துள்ளார். ஆவணத்தில் பச்சைப் பட்டாணி எனக் குறிப்பிடாமல், மசூர் பருப்பு எனக் குறிப்பிட்டு முறைகேடு செய்துள்ளார். இதற்கு சென்னை சுங்கத் துறை அதிகாரிகள் 3 பேர் மற்றும் ஒரு சுங்கத் துறை ஏஜென்ட் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
ரூ.60 லட்சம் பறிமுதல்: இது தொடர்பாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி சுங்கத் துறை அதிகாரிகள் 3 பேர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன், சுங்கத் துறை அதிகாரி ஒருவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.60 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அத்துடன், பச்சைப் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்ட 4 கன்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...