Published : 16 Jan 2025 07:24 AM
Last Updated : 16 Jan 2025 07:24 AM

தந்தை கொலைக்கு பழிக்குபழி: சென்னையில் வீடு புகுந்து மனைவி கண் எதிரே ரவுடி கொலை

சென்னை: மனைவி கண் எதிரே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, திடீர் நகரைச் சேர்ந்தவர் உலகநாதன் (33). ரவுடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவருக்கு மாலதி (30) என்ற மனைவி உள்ளார். இவர் மீது கஞ்சா விற்பனை உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் இரவு தம்பதியர் வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த 10 பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாகத் தாக்கியுள்ளது. இதில், உடல் முழுவதும் காயம் அடைந்த உலகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலை தடுக்க முயன்ற மாலதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் கும்பல் தப்பி ஓடியுள்ளது.

கொலை சம்பவத்தை அறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து உலகநாதன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயம் அடைந்த மாலதியை அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கொலை தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வல்லரசு அவரது கூட்டாளிகள் 5 பேர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தந்தை கொலைக்கு பழிக்குப் பழியாக உலகநாதன் தீர்த்துக் கட்டப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”கடந்தாண்டு புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடியான தேசிங்கு என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளுக்கு உலகநாதன் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், தேசிங்கின் மகனான தற்போது கைது செய்யப்பட்ட வல்லரசுக்கும், உலகநாதனுக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. தந்தையின் கொலைக்கு பழிக்குப் பழியாக தற்போது வல்லரசு, உலகநாதனை கொலை செய்துள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து தொடர் விசாரணை நடைபெறுகிறது” என்று போலீஸார் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon