Published : 09 Jan 2025 06:19 AM
Last Updated : 09 Jan 2025 06:19 AM
சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரும்பாக்கம் காவல் நிலைய தனிப்படையினர், சென்னையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த நபர்களை, கடந்த அக்டோபர் மாதம் முதல் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.
இந்த கும்பலைச் சேர்ந்த ராஜா, அவரது கூட்டாளி சத்திய சீலன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன், 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜான் ஒக்காபரை போலீஸார் புது டில்லியில் கடந்த 3-ம் தேதிகைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘மியான்மர் நாட்டில் இருந்து மெத்தம்பெட்டமைன், கெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் டெல்லிக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து அவை தமிழகம் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.
இக்கும்பல், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தகஞ்சிப்பாணி இம்ரான் உத்தரவுப்படி செயல்பட்டிருப்பதும், இலங்கையைச் சேர்ந்த கஞ்சிப்பாணி இம்ரான் இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப் பொருளை கடத்துவதும் தெரியவந்தது.
கஞ்சிப்பாணி இம்ரான் கேட்டதன் பேரிலேயே நாட்டுத் துப்பாக்கிகளையும் அந்த கும்பல் கடத்தியிருப்பது தெரியவவந்துள்ளது. கஞ்சிப்பாணி இம்ரான் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த கும்பலைச் சேர்ந்தவர்களை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில், கஞ்சிப்பாணி இம்ரான் இந்தியாவில் தலைமறைவாக இருக்கிறாரா என்றும் க்யூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஒரு காவலர் கைது: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ஜேம்ஸ், அயனாவரம் காவல் நிலைய காவலர் பரணி மற்றும் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் (என்சிபி) பணியாற்றும் காவலர்கள் ஆனந்த், சபீர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த அருள்பாண்டியன் (30) என்பவரை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT