Published : 05 Jan 2025 02:45 PM
Last Updated : 05 Jan 2025 02:45 PM
சென்னை: கொடுங்கையூர் பகுதியில் வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கி விற்கும் தொழிலில் பங்கு தருவதாக கூறி ரூ. 38 லட்சம் மோசடி செய்ததாக கணவன் மனைவி உட்பட 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, கொடுங்கையூர், சின்னாண்டிமடம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடன் முகைதீன் அப்துல்காதர் என்பவர் சில காலங்களாக பழகி, வெளிநாட்டு உபகரணங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்றும், வரும் லாபத்தில் 60% பங்கு தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனை உண்மையென நம்பிய செந்தில், முகைதீன் அப்துல்காதர் என்பவருக்கு நேரடியாகவும், ஜிபே மூலமும் பல தவணைகளாக மொத்தம் சுமார் ரூ.38 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட முகைதீன் அப்துல்காதர், செந்திலை ஏமாற்றும் நோக்கிலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து செந்தில், P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
P-6 கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார், தீவிர விசாரணை செய்து, வழக்கில் சம்பந்தப்பட்ட முகைதீன் அப்துல் காதர், அவரது மனைவி உஸ்னாராபேகம் மற்றும் அவரது மைத்துனர் ஏஜாஸ், ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். முகைதீன் அப்துல்காதரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT