Last Updated : 05 Jan, 2025 01:26 PM

 

Published : 05 Jan 2025 01:26 PM
Last Updated : 05 Jan 2025 01:26 PM

மதுரை மேயரின் உறவினரான பொன்விஜய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கூடலூர்: மதுரை மேயர் இந்திராணியின் உறவினரான பொன்விஜய் என்பவர் மீது அவரது மனைவி இலக்கியா கடந்த 31-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பலத்த தீக்காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்விஜய் இன்று காலையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இலக்கியா மீதான வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டது.

தேனி மாவட்டம் கூடலூர் கள்ளர் வடக்கு புதுத்தெருவைச் சேர்ந்தவர் பொன்விஜய் (48). இவரது மனைவி இலக்கியா (37). திமுக பிரமுகரான பொன்விஜய், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தின் சகோதரர் ஆவர். இவர்களுக்கு ஆண் பெண் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பொன்விஜய் மொபைலில் அடிக்கடி வீட்டுக்கு வெளியே சென்று பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த இலக்கியாவுக்கும் கணவர் பொன்விஜய்க்கும் இடையே தகராறு அதிகரித்து வந்துள்ளது. சமீபத்தில் உறவினர்கள் பேசி இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி தம்பதிக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை அதிகரித்தது. பின்பு பொன்விஜய் அன்று இரவு மாத்திரை சாப்பிட்டு தூங்கிவிட்டார்.

கோபத்தில் இருந்த இலக்கியா 31ம் தேதி காலையில் தூங்கிக் கொண்டிருந்த பொன்விஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். பின்பு இலக்கியா வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். பொன்விஜயின் அலறல் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பின்பு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து, கூடலூர் வடக்கு போலீஸார் இலக்கியாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பொன்விஜய்க்கு 71 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று(ஞாயிறு) உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு மாலையில் கூடலூருக்கு கொண்டு வரப்பட உள்ளது. பொன்விஜய் இறந்ததைத் தொடர்ந்து மனைவி இலக்கியா மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x