Published : 01 Jan 2025 08:42 AM
Last Updated : 01 Jan 2025 08:42 AM
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள ஞானசேகரன், ஏற்கெனவே, துப்பாக்கி முனையில் தொழில் அதிபரைக் கடத்திய வழக்கிலும் சிக்கியுள்ளார்.
இதுபற்றி கூறப்படுவதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தர மேரூர் அருகே உள்ள பாக்கம் பகுதியில் உள்ள கிராமத்தில் ஞானசேகரன் சிறிது காலம் வசித்துள்ளார். அப்போது, 2018-ல் பிரபல டைல்ஸ் கம்பெனி உரிமையாளர் ஒருவரை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி, ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார். பயந்து போன தொழிலதிபரின் குடும்பத்தினர் பணம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
மதுராந்தகம் பாலத்தில் இருந்து இந்த பணத்தை சூட்கேசில் வைத்து, கீழே வீசும்படி ஞானசேகரன் கூறியுள்ளார். அதன்படி கடத்தப்பட்ட தொழிலதிபரின் உறவினர்கள் ரூ.12 லட்சம் பணத்துடன் சூட்கேசை மதுராந்தகம் பாலத்தில் இருந்து கீழே வீசி உள்ளனர்.
அந்த பணத்தை எடுத்துக்கொண்ட ஞானசேகரன் மீதி ரூ.13 லட்சமும் வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தொழிலதிபரை தீர்த்துக்கட்டி விடுவோம் என்றும் மிரட்டி உள்ளார். போலீஸில் சிக்காமல் இருக்க கடத்திய தொழிலதிபருடன் காரில் சுற்றி திரிந்துள்ளார்.
தனிப்படை சுற்றிவளைப்பு: அப்போது காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீஸார் தொழிலதிபரின் உறவினர்கள் போல ஞானசேகரனுடன் போனில் பேசி மீதி ரூ.13 லட்சத்தையும் கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேல்மருவத்தூர் அருகே ரூ.13 லட்சம் பணத்துடன் வரும்படி ஞானசேகரன் கூறியுள்ளார்.
பணத்துடன் வருவதாக கூறிய தனிப்படை போலீஸார் ஞானசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் ஞானசேகரன் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடி விட்டார். அதன்பின்னர், திண்டிவனம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து திண்டிவனம் போலீஸாரும், காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரும் ஞானசேகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ஞானசேகரன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் துப்பாக்கி யோடு கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் ஞானசேகரன் பற்றிய மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து, ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார், காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். 2018 -ம் ஆண்டு நடந்த தொழிலதிபர் கடத்தல் சம்பவத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த ஞானசேகரன், அதன் பிறகே பிரியாணி கடை நடத்த ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT