Published : 30 Dec 2024 04:01 PM
Last Updated : 30 Dec 2024 04:01 PM

பாலியல் வன்கொடுமையால் நர்சிங் மாணவி உயிரிழக்கவில்லை: புதுக்கோட்டை எஸ்.பி விளக்கம்

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே உயிரிழந்த நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்கா குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சவுமியா(20). நர்சிங் கல்லூரி மாணவியான இவர், அதே ஊரில் உள்ள கிணற்றில் இருந்து இருதினங்களுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை வழக்காக வடகாடு போலீஸார் பதிவு செய்தனர்.

மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து உடலை பெற மறுத்து நேற்று முன்தினம் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறைக்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்ததால்தான் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவி சவுமியாவும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞரும் காதலித்துள்ளனர். பின்னர், சொந்த காரணங்களுக்காக பிரிந்துவிட்டனர். மன அழுத்தம் காரணமாகவே சவுமியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சவுமியாவின் உடலில் காயங்கள் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுமியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்படவில்லை என தெரிகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டார் என சமூக வலைதளத்தில் பரவும் தகவல் தவறானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x