Published : 30 Dec 2024 06:25 AM
Last Updated : 30 Dec 2024 06:25 AM

சென்னை | காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா: ஜிம் மாஸ்டர் வீட்டில் நகை கொள்ளை - பிரபல கொள்ளையன் கைது

சென்னை: ஜிம் மாஸ்டரின் வீடு புகுந்து நகை கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். சென்னை நங்கநல்லூர் 5-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஜனார்த்தனன் (42). ஜிம் மாஸ்டரான இவர் சொந்தமாக ஜிம் நடத்தி வந்தார்.

கடந்த 27-ம் தேதி மதியம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் இறப்பு சடங்குக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் கிரில் கேட் மற்றும் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த தலா 8 கிராம் எடை கொண்ட 29 தங்க நாணயங்கள் மற்றும் பணம் ரூ.1 லட்சம் திருடு போயிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜனார்த்தனன் இது தொடர்பாக பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் ஜனார்தனர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை ஆர்.ஏ.புரம், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ஆனந்த் (49) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 29 பவுன் தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம், கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 1 கவுபார் (சிறிய கடப்பாரை) பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான ஆனந்த் மீது ஏற்கெனவே திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x