Published : 30 Dec 2024 03:04 AM
Last Updated : 30 Dec 2024 03:04 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு, ‘டிரீம்பிளக் பேடெக் சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளது. இந்நிலையில், டிரீம்பிளக் நிறுவனத்தின் செயல் அதிகாரி நரசிம்ம வசந்த் சாஸ்திரி போலீஸில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: டிரீம்பிளக் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியில் வைத்துள்ள 2 கணக்குகளில் இருந்து ரூ.12 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.டிரீம்பிளக் நிறுவனத்தின் முக்கிய தகவல்களை ஆக்சிஸ் வங்கியில் கொடுத்து புது ஐடி, இ மெயில் ஐ.டி. போன்றவற்றுக்கான அனு மதி பெறப்பட்டுள்ளது. வங்கிக்கு 2 ஐடி மற்றும் 2 இ மெயில்கள் மூலம்தான் பணப் பரிவர்த்தனை நடைபெறும்.
செல்போன், மெயில் முகவரி: ஆனால், போலி ஆவணங்கள் மூலம் கூடுதலாக 2 செல்போன் எண்கள், இ மெயில் முகவரிகள் வங்கியில் மாற்றப்பட்டுள்ளன. ஓடிபி.யும் அவர்கள் மாற்றிய செல்போன், இ மெயில்களுக்கு சென்றுள்ளன. பெங்களூருவில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் எங்கள் நிறுவனம் கணக்கு வைத்துள்ளது. ஆனால், பெங்களூருவில் எங்கள் நிறுவனம் இருக்கும்போது, குஜராத் மாநிலத்தின் அங்கலேஸ்வர் மற்றும் அப்ரமா ஆகிய 2 நகரங்களில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளைகள் அனுமதி வழங்கி உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டிரீம்பிளக் நிறுவன அதிகாரி நரசிம்ம வசந்த் சாஸ்திரி புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆக்சிஸ் வங்கி மக்கள் தொடர்பு துறை மேலாளர் வைபவ் பிதாடியா (29), சூரத்தை சேர்ந்த வங்கி ஏஜென்ட் நேகா பென் விபுல்பாய் (26), இன்சூரன்ஸ் ஏஜென்டும் வைபவின் சக ஊழியருமான சைலேஷ் (29), ராஜ்கோட்டை சேர்ந்த கமிஷன் ஏஜென்ட் சுபம் (26) ஆகிய 4 பேரை கர்நாடக போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “டிரீம்பிளக் நிறுவன வங்கிக் கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பணம் எங்கெங்கு சென்றுள்ளது என்று விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன், நிறுவனத்தின் தகவல்களை சரிபார்ப்பதில் ஆக்சிஸ் வங்கி எப்படி அலட்சியமாக இருந்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT