Published : 29 Dec 2024 01:56 PM
Last Updated : 29 Dec 2024 01:56 PM
கடந்த 4 மாதங்களில் காவல் உதவி செயலி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 10,708 அழைப்புகள் வந்துள்ளதாகவும், அதில் 1,241 அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், "காவல் உதவி செயலி" பொதுமக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டது. எந்த வகையான இன்னல் அல்லது அவசரநிலையின் போதும் உடனடி உதவியைப் பெறுவதற்காக, கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எச்சரிக்கையை அனுப்புவதற்கு காவல் உதவி செயலியைப் பயன்படுத்தலாம். பெண்கள் தாங்கள் பாதிக்கப்படக்கூடிய அல்லது அச்சுறுத்தலாக உணரும் போதெல்லாம் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
அவர்கள் எங்கிருந்தாலும் தமிழக காவல்துறை விரைவில் சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும். கடந்த செப்.1-ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை, காவல் உதவி செயலி மூலம் 10,708 அழைப்புகள் பெறப்பட்டு, அதில் 1,241 அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், காவல் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கடந்த டிச.15-ம் தேதி வரை 4,87,565 பேர் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, காவல்துறையின் விழிப்புணர்வால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த செயலியை மாணவிகள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதுதவிர, தமிழக காவல் துறை சார்பில் 5 லட்சம் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் "அவள் திட்டம்" தொடங்கப்பட்டு, இதுவரை 35,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT