Published : 28 Dec 2024 05:19 PM
Last Updated : 28 Dec 2024 05:19 PM
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே வெங்கச்சேரி தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது இன்று (டி.28) நீருக்கடியில் உள்ள மணலில் சிக்கி இரு குழந்தைகள், ஒரு பெண் ஆகிய மூவர் உயிரிழந்தனர். இவர்களை காப்பாற்ற சென்ற ஒருவரும் மணலில் சிக்கி, பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
உத்திரமேரூர், வெங்கச்சேரி அருகே உள்ள கடம்பரைகோயில் பகுதியைச் சேர்த மனோகரன் மனைவி பத்மா (55). இவரது மகள்கள் சுதா, கலைச்செல்வி. இவர்கள் திருமணம் முடிந்து சென்னை அய்னாவரத்தில் உள்ளனர். சுதாவின் மகன் தீபக்குமார் (16), கலைச்செல்வியின் மகள் வினிஷா (9) ஆகிய இருவரும் பாட்டி வீட்டுக்கு விடுமுறையை கழிக்க வந்தனர். பத்மா, இந்த இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெங்கச்சேரி தடுப்பணைக்குச் சென்றார்.
உடன் உறவினர் வினோத்குமார் சென்றார். குழந்தைகள் தண்ணீரில் இறங்கி குளிக்கும்போது மணலில் சிக்கினர். இதனைக் கண்ட பத்மா இவர்களை காப்பாற்ற முயன்றார். இவரும் மணலில் சிக்கி மூழ்கினார். மூவரும் மூழ்குவதை கண்ட வினோத்குமார் அருகாமையில் உள்ளவர்களை சத்தமிட்டு அழைத்தபடி இவர்களை காப்பாற்ற முயன்றார். இவரும் மணலில் சிக்கினார். அருகாமையில் இருந்தவர்கள் ஓடிவந்த வினோத்குமாரை மீட்டனர். மற்றவர்கள் மணலில் சிக்கி உள்ளே மூழ்கினர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு பத்மா, வினிஷா, தீபக்குமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர். போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். உயிரிழந்த மூவர் சடலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாக மாகரல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT