Published : 27 Dec 2024 07:01 AM
Last Updated : 27 Dec 2024 07:01 AM
சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கிறிஸ்தவ மத போதகரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் கெனிட்ராஜ் (47). அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையில் போதகராக உள்ளார். இவரது வீட்டின் கீழ்தளத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் 26 வயது பெண்ணிடம், ‘‘உங்களுக்கு பிசாசு பிடித்துள்ளது, அதனால், ஜெபிப்பதற்காக சபைக்கு வரவேண்டும்’’ என கெனிட்ராஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண், அவரது சபைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரிடம் கெனிட்ராஜ் ஆபாசமாக பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டுக்கு சென்ற கெனிட்ராஜ், தனது மனைவி, பிள்ளைகள் வெளியே சென்றிருப்பதாகவும், இப்போது வீட்டுக்கு வந்தால் ஜெபித்து அனுப்புவேன் என்றும், இல்லையென்றால், உன் கணவர், பிள்ளைகளை கொலை செய்துவிடுவேன் என்றும் அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.
இதனால், அச்சமடைந்த அந்த பெண், கெனிட்ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அவரிடம் கெனிட்ராஜ் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கெனிட்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT