Published : 23 Dec 2024 02:18 PM
Last Updated : 23 Dec 2024 02:18 PM

பல்லாவரம் அருகே கோயிலில் மாற்றுத் திறனாளியை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மகனுக்கு போலீஸ் வலை 

பொழிச்சலூர்: பல்லாவரம் அருகே கோயிலில் மாற்றுத் திறனாளியை கடுமையாகத் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், விநாயகா நகர், மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவர், பொழிச்சலூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகன் சரவணன் (35). மாற்றுத் திறனாளியான இவர், நேற்று மாலை, அதே பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயிலுக்குள் சென்றார். அப்போது, ஏற்கெனவே கோயிலின் உள்ளே இருந்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ் பாபு (35) என்பவருக்கும், சரவணனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முக்கிய நிலையில், தினேஷ்பாபு தனது நண்பருடன் சேர்ந்து சரவணனை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். பதிலுக்கு சரவணனும் தனது ஊன்றுகோலால் தினேஷ்பாபுவை தாக்கினார். இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்டு கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இது குறித்து சங்கர் நகர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், தினேஷின் நண்பர் ஒருவரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ்பாபுவை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொழிச்சலூரில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வட திருநள்ளாறு என்று அழைக்கப்படும் இக்கோயில் சிறந்த சனி பரிகார தலமாகவும் பக்தர்களால் கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோயில் கடந்த பல ஆண்டுகளாக தனியார் கை வசம் இருந்தது. அதனை, பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன், கோயிலை தன் வசம் வைத்திருந்த தனி நபர் விரட்டியடிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் நன்கொடை பணம்,எண்ணெய், நெய் மற்றும் சிதறு தேங்காய் ஆகியவற்றை உரிமை கொண்டாடுவது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று குழுக்களுக்கு இடையே போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக ஏற்பட்ட மோதலே இவ்வாறு கோயில் உள்ளே அடிதடியில் முடிந்ததாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பெயர் அளவுக்கு மட்டுமே கோயிலை கையகப்படுத்தி உள்ளனர். ஆனால், கோயில் உள்ளே மேற்கொள்ளப்படும் பணிகளில் அரசு அதிகாரிகளையோ அல்லது அரசு ஊழியர்களையோ ஈடுபடுத்தாமல், உள்ளூர் தனி நபர்களை அனுமதிப்பதால்தான் இதுபோன்ற மோதலுக்கு வழி வகிக்கிறது. மீண்டும் இது போன்ற ஒரு பிரச்சனை ஏற்படாத வகையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் போதிய அரசு ஊழியர்களை கோயில் உள்ளே பணி நிமித்தம் செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதனிடையே, இருவரும் கோயில் உள்ளே மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீசாரால் தேடப்பட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ்பாபு மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்ததும், இவர், சங்கர் நகர் காவல் நிலையத்தில் முன்னாள் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x