Published : 23 Dec 2024 12:53 AM
Last Updated : 23 Dec 2024 12:53 AM
மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் உதவி ஜெயிலர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும், அவரை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வெளியே வந்த ஒருவர், பைபாஸ் சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்துக்கு மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி (52) அடிக்கடி உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது, உணவக உரிமையாளரின் மகள் மற்றும் பேத்தியிடம் தவறான நோக்குடன் பேசினாராம். இதை உணவக உரிமையாளரின் மகள் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறி, உணவக உரிமையாளரின் பேத்தியான 14 வயது சிறுமியிடம் பாலகுருசாமி தனது செல்போன் எண்ணைக் கொடுத்துள்ளார். மேலும், செல்போனில் பாலகுருசாமியிடம் சிறுமி பேசியபோது, அவரை கரிமேடு பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை தனது தாத்தா உள்ளிட்டோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாலகுருசாமி கூறிய இடத்துக்கு நேற்று முன்தினம் சிறுமியை அனுப்பிய உறவினர்கள், அங்கு மறைந்திருந்து கண்காணித்தனர். அங்கு சிறுமியிடம் பாலகுருசாமி பேசிக்கொண்டிருந்தபோது வந்த உறவினர்கள், அவரை காலணியால் தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், சிறுமியிடம் பாலியல் ரீதியில் பேசி, துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரை தெற்கு மகளிர் போலீஸார், பாலகுருசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். மேலும், அவரை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையே, பொது இடத்தில் தன்னை காலணியால் தாக்கியதாக உதவி ஜெயிலர் பாலகுருசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தாத்தா, சித்தி ஆகியோர் மீது கரிமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT