Published : 19 Dec 2024 03:26 AM
Last Updated : 19 Dec 2024 03:26 AM

கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி விவகாரத்தில் திடீர் திருப்பம்: எஸ்.ஐ., வருமானவரித் துறையினர் உட்பட 4 பேர் கைது

சென்னையில் கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் எஸ்ஐ மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜூனைத் அகமது. அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகியாகவும் உள்ளார். இவர் சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக, தன்னிடம் பணிபுரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் (36) என்பவரிடம் ரூ.20 லட்சத்தை கொடுத்து கடந்த 15- ம் தேதி சென்னைக்கு அனுப்பி உள்ளார்.

அந்த பணத்தை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் கொடுப்பதற்காக முகமது கவுஸ் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் 16-ம் தேதி இரவு சென்றுள்ளார். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் முகமது கவுஸை மடக்கி சோதித்துள்ளார்.

அப்போது, வாகனத்தில் கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் இருந்துள்ளது. அந்த பணத்துக்குரிய ஆவணங்களை கேட்டபோது அது முகமது கவுஸிடம் இல்லை. இதையடுத்து, வாகன சோதனையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனது நண்பர்களான வருமானவரித் துறையில் பணி செய்யும் 3 பேருக்கு போனில் அழைத்துள்ளார். அவர்கள் வந்து முகமது கவுஸை காரில் ஏற்றிச்சென்று கத்திமுனையில் பணத்தை பறித்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்து முகமது கவுஸ் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தெரிவித்தார். எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்காவில்லை. இதனால் வழிப்பறி செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமா அல்லது முகமது கவுஸ் நாடகமாடுகிறாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இதையறிந்த காவல் ஆணையர் அருண், இந்த வழக்கில் உண்மை தன்மை அறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, வாகன சோதனையில் ஈடுபட்டது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்.எஸ்.ஐ) பணி செய்துவரும் ராஜா சிங் (48) என்பது தெரிந்தது. அவர் சம்பவத்தன்று, பணத்துடன் வந்த முகமது கவுஸை மடக்கி பிடித்துள்ளார். பின்னர், இதுகுறித்து தனது நண்பர்களான வருமானவரித் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் பிரபு (31), ஆய்வாளராக பணியாற்றும் தாமோதரன் (41), ஊழியர் பிரதீப் (42) ஆகியோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார்.

அவர்கள், முகமது கவுஸை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் கடத்தி ரூ.20 லட்சத்தில் ரூ.15 லட்சத்தை பறித்துக் கொண்டு, மீதம் உள்ள ரூ.5 லட்சத்தை முகமது கவுஸிடம் கொடுத்து விட்டு தப்பி ஓடிவிடும்படி கூறியுள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து புகாருக்குள்ளான உதவி ஆய்வாளர் மற்றும் ஐ.டி ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கத்திமுனையில் பறிக்கப்பட்ட பணத்தில் ரூ.14 லட்சம், அண்ணா நகரில் உள்ள கைது செய்யப்பட்ட பிரதீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், பணத்தை கொடுத்து அனுப்பிய ஜூனைத் அகமதுவிடம் திருவல்லிக்கேணி துணை ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி விசாரணை நடத்தினார். அப்போது, அவர் தான் முகமது கவுஸிடம் ரூ.35 லட்சம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

சட்டவிரோதமாக பணம் கைமாற்றும் கும்பலுக்கும் (குருவி) கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x