Published : 15 Dec 2024 01:25 PM
Last Updated : 15 Dec 2024 01:25 PM
பெங்களூரு: பெங்களூரு தனியார் நிறுவன மேலாளர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோரை பெங்களூரு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
சுபாஷின் மனைவி நிகிதா சிங்காரியா குருகிராமில் கைது செய்யப்பட்டார். நிகிதாவின் தாயார் நிஷா சிங்காரியாவும் சகோதரர் அனுராக் சிங்காரியாவும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு போலீஸார் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்த வழக்கில் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.
முன்னதாக,. நிகிதா, அவரது தாயார், சகோதரர் உள்ளிட்டோர் மூன்று நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு போலீஸார் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன? பெங்களூரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய அதுல் சுபாஷ் (34) கடந்த 16-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு, 24 பக்கங்களில் தற்கொலைக்கான காரணத்தை விவரிக்கும் கடிதமும், 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவையும் வெளியிட்டார்.
அதில் தன் மனைவி நிகிதா சிங்காரியாவுடனான விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சமாக ரூ.3.3 கோடி கேட்டு துன்புறுத்தியது, தன் 3 வயது மகனை காண்பிக்காமல் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.40 ஆயிரம் கோரியது, பொய் வழக்குகளை தொடுத்து தொல்லை கொடுத்தது, வழக்கை தீர்க்க நீதிபதிக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டது ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நிகிதாவும், சுபாஷ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், கணவன் மனைவி உறவை மிருகத்தனமாக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
நிகிதா - சுபாஷ் இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுபாஷ் பெங்களூருவில் பணியாற்றி வந்த நிலையில், நிகிதா அவரது மகனுடன் டெல்லியில் வசித்து வந்தார். அங்கு ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT