Published : 13 Dec 2024 12:33 AM
Last Updated : 13 Dec 2024 12:33 AM
அறந்தாங்கி அருகே யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது. பிரசவித்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் பெரிய செங்கீரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். பி.இ. பட்டதாரி. இவரது மனைவி அபிராமி(27). பி.எஸ்சி. பட்டதாரி. கர்ப்பிணியான அபிராமிக்கு நேற்று முன்தினம் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. மேலும், அபிராமிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சுகாதாரத் துறை அலுவலர்கள் அபிராமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை செய்ததுடன், அபிராமியை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விக்னேஷ் அளித்த புகாரின்பேரில், ஆவுடையார்கோவில் போலீஸார் ராஜசேகரிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "அபிராமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு 3 மாதத்தில் மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியின் காரணமாக குழந்தை இறந்துவிட்டது. இந்நிலையில், அவர் மீண்டும் அபிராமி கர்ப்பமடைந்தார். அவ்வப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், மனைவிக்கு ராஜசேகர் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். பிறந்த குழந்தை அடுத்த சில மணி நேரங்களில் இறந்துவிட்டது. அதை வீட்டின் அருகே அடக்கம் செய்துவிட்டனர். அறந்தாங்கி வட்டாட்சியர் முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, பரிசோதனை செய்யப்படும். பிறகு, சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
பிரசவத்துக்கு நவீன சிகிச்சை முறைகளும், கர்ப்பகாலத்தில் பலவிதமான ஊட்டச்சத்துகள், உதவித்தொகை போன்றவற்றை அரசே வழங்கி வரும் நிலையில், யூடியூப் பார்த்து பிரசவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என்று சுகாதாரத் துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT