Last Updated : 10 Dec, 2024 01:35 PM

 

Published : 10 Dec 2024 01:35 PM
Last Updated : 10 Dec 2024 01:35 PM

வேலியே பயிரை மேயும் ஆபத்து! - போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் போலீஸார்

இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை மெல்லக் கொல்லும் விஷமாக போதைப் பொருள் மாறி வருகிறது. இதை ஒழிக்க போலீஸ் தரப்பில் என்னதான் மெனக்கிட்டாலும், போதைப் பொருள் புழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வடசென்னையில் கல்லூரி மாணவர்களே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை தயாரிக்குமளவுக்கு நிலமை கை மீறிக் கிடக்கிறது.

ரவுடிகளை ஒடுக்க துப்பாக்​கியைத் தூக்கிய சென்னை போலீஸ், இன்னொரு பக்கம் போதை மாஃபி​யாக்களை ஒடுக்கும் வேலைகளையும் முடுக்​கி​விட்டது. அப்படித்தான் நைஜீரியர் உள்ளிட்ட வெளிநாட்டு வியாபாரிகள் மட்டுமின்றி உள்ளூர் ஏஜென்​டு​களும் அடுத்​தடுத்து கைது செய்யப்​பட்​டனர்.

நடிகர் மன்சூர் அலிகான் மகன், சின்னத்திரை நடிகை, உதவி இயக்குநர் என பலரையும் கண்ணி​வைத்துப் பிடித்து கப்பிக்குள் தள்ளியது போலீஸ். இந்த விவகாரத்தில் சென்னை மாநகர் காவலைச் சேர்ந்த காவலர்கள் பரணி, ஜேம்ஸ் ஆகிய இருவரும் போதைப் பொருள் விவகாரத்தில் கைதானது தான் யாரும் எதிர்​பார்க்காத திகில் திருப்பம்.

வேலியே பயிரை மேய்ந்த இந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்குள் சென்னையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் முதல்நிலை காவலர்கள் ஆனந்தன், சமீர் ஆகிய மேலும் இருவர் கைதாகி திகிலை இன்னும் கூட்டி​னார்கள். இதில் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் உதவியாளர் என்றும் சொல்கிறார்கள்.

இந்தக் காவலர்கள் இருவருக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்​ப​தாகச் சொல்லப்​படு​கிறது. இவர்கள் பெங்களூருவில் இருந்து மெத்தம்​பெட்​டமைன் போதைப் பொருளை வரவழைத்து அதை செல்போன் செயலி மூலம் விற்பனை செய்து லட்சக் கணக்கில் பணம் பண்ணி​ய​தாகச் சொல்லும் விசாரணை அதிகாரிகள், இவர்களது முழுமையான பின்னணி குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து சென்னை போலீஸ் அதிகாரி​களிடம் கேட்ட​போது, “மதுவின் விலை அதிகமாக இருப்​பதால் பலர் மலிவாக கிடைக்கும் கஞ்சாவுக்கு மாறுகின்​றனர். சீக்கிரமே நிறைபோதைக்கு போக நினைப்​பவர்கள் செயற்​கையாக தயாரிக்​கப்​படும் மெத்தம்​பெட்டமைன் வகை போதைப் பொருட்களை பயன்படுத்து​கின்​றனர். இதன் ஒரு கிராம் விலையே ஆயிரக் கணக்கில் வரும். இதை நீரில் கரைத்து ஸ்ரிஞ்ச் மூலம் உடலில் குறைவான அளவே செலுத்​தி​னாலும் நீண்ட நேரம் போதை நீடிப்​ப​தாகச் சொல்கிறார்கள். இதேரூட்டில் பலர் வலி நிவாரணி மாத்திரைகளையும் கரைத்து உடலில் ஏற்றிக் கொள்கின்​றனர்.

இதற்கான பணப்பரி​மாற்​றங்கள் கிரிப்டோ கரன்சி மாதிரியான வழிகளில் கையாளப்​படு​வதால் போதைப் பொருளை யார் கொண்டு வந்து தருகிறார்கள் என்ற விவரம் அதைப் பயன்படுத்து​வோருக்கே தெரியாது. அதனால் இந்த விவகாரத்தில் குற்ற​வாளிகளை அடையாளம் காண்பதும் எங்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது” என்றனர். இளம் தலைமுறை​யினரை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப் பொருட்கள் புழக்​கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்​பினரின் எ​திர்​பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x