Published : 08 Dec 2024 01:21 AM
Last Updated : 08 Dec 2024 01:21 AM

சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயற்சி: டிராவல்ஸ் உரிமையாளர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் சார்பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற டிராவல்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள சுண்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டஸ் மார்ட்டின் (47). இவர், அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கடந்த 5-ம் தேதி மாலை வேறு ஒருவரின் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி, பத்திரப் பதிவு செய்வதற்காக கருங்கல் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அவர் வழங்கிய ஆவணங்களை, சார் பதிவாளர் (பொறுப்பு) அரிகிருஷ்ணன் பார்வையிட்டார். ஆவணங்களில் முரண்பாடு காணப்படுவதாகவும், நிலத்தில் வில்லங்கம் இருப்பதாகவும் தெரிவித்த அரிகிருஷ்ணன், இது தொடர்பாக மாவட்டப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யுமாறு ஜஸ்டஸ் மார்ட்டினிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் மீண்டும் கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மது போதையில் வந்த ஜஸ்டஸ் மார்ட்டின், சார் பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்துள்ளார்.

மேலும், தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிறிய பாட்டிலில் இருந்து பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டார். தொடர்ந்து, அரிகிருஷ்ணன் மீதும், அருகே இருந்த பணியாளர் மீதும் பெட்ரோலை ஊற்றி, தீக்குச்சியை உரசி சார் பதிவாளர் மீது வீசியுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக தீக்குச்சியில் தீப்பிடிக்காததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அரிகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் அறையை விட்டு வெளியே ஓடினர். பின்னர் அங்கிருந்து ஜஸ்டஸ் மார்ட்டின் சென்று விட்டார்.

இதுகுறித்து கருங்கல் போலீஸார் விசாரணை நடத்தி, ஜஸ்டஸ் மார்ட்டின் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ க்க முயலும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x