Published : 07 Dec 2024 04:32 AM
Last Updated : 07 Dec 2024 04:32 AM
நாகர்கோவில்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்த உதவி பெண் செயற்பொறியாளர் மற்றும் அவரது கணவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது வீட்டை அரசு உடமையாக்கவும் உத்தரவிடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்தவர் அமலா ஜெசி ஜாக்குலின் (50). இவர், தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 1999 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அமலா ஜெசி ஜாக்குலினும், இரண்டாவது குற்றவாளியாக அவரது கணவர் ராஜேஸ்வரனும் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு விசாரணை கன்னியாகுமரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அமலா ஜெசி ஜாக்குலின், ராஜேஸ்வரனுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் நேற்று தீர்ப்பளித்தார். மேலும், நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியில் உள்ள அவர்களது வீட்டை அரசு உடைமையாக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT